நீங்கள் மறுபடியும் பிறப்பதற்காக இயேசு இரத்தம் சிந்தினார்.

‘இயேசு உங்களுக்காக ஏன் இரத்தம் சிந்தினார்’ என்ற தொடரின் நிறைவுப் பகுதிக்கு நாம் நெருங்கி வந்துவிட்டோம், நாளைய தினம் ஈஸ்டர். ✝️ இந்தத் தொடரை நீங்கள் நன்கு கற்றறிந்தீர்களா, இது இயேசு சிலுவையில் செய்த தியாகம் பற்றி ஏதேனும் புதிய வெளிப்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வந்ததா என்று கேட்க நான் ஆவலாக இருக்கிறேன். இன்று, ஏழாவது முறையாகவும் மற்றும் இறுதி முறையாகவும் இயேசு இரத்தம் சிந்தியதைப் பற்றிப் பார்ப்போம். சிலுவையில் மரித்தல் என்பது அந்நாட்களில் நீண்ட நேரமாகவும் மெதுவாகவும் நடக்கும் ஒரு செயல்முறையாக இருந்தது. விரைவில் மரணமடைய, ரோமானிய வீரர்கள் பெரும்பாலும் சிலுவையில் அறையப்பட்டவர்களின் கால்களை உடைப்பார்கள், அப்படிச் செய்வதால், அவர்கள் மூச்சுத் திணறி சில நிமிடங்களில் மரித்துவிடுவார்கள். இயேசுவுக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட மற்ற இரண்டு குற்றவாளிகளின் கால்களையும் அவர்கள் உடைத்தனர், ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கனவே மரித்துவிட்டதைக் கண்டார்கள்: “அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது." (யோவான் 19:33-34,36-37) இயேசுவின் விலாவில் குத்தப்பட்ட ஈட்டி ஏதேன் தோட்டத்து சம்பவத்தைக் குறிப்பிடுகிறது, அங்கு ஆண்டவர் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளை சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 2). பிரசவத்தின்போது ஒரு தாயின் வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைவதற்கு அடையாளமான ஒரு குறிப்பிடத்தக்க உருவகமாகவே இரத்தமும் தண்ணீரும் திடீரென விலாவிலிருந்து வெளியேறும் நிகழ்வு உள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுமே புதிய வாழ்க்கையின் உருவாக்கத்தைக் குறிப்பதாகவே காணப்படுகின்றன. வேதாகமம் மறுபடியும் பிறப்பதைப் பற்றியும் (யோவான் 3:3-5) ஒரு புதிய சிருஷ்டியாக மாறுவதைப் பற்றியும் சொல்கிறது (2 கொரிந்தியர் 5:17-18). சிலுவையில் இயேசு மரித்ததன் மூலம், நாம் நம்முடைய பழைய சுபாவத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, மறுபடியும் பிறந்ததைப்போல், அவருக்குள் புது சிருஷ்டிகளாக மாறுவதை அவர் சாத்தியமாக்கினார்! “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.” (2 கொரிந்தியர் 5:17-18) அன்பரே, இயேசு சிந்திய இறுதித் துளி இரத்தம், கடைசி முடிவு அல்ல - அது புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகும். 🌿 அன்பரே, இன்று இந்தப் புதிய வாழ்க்கையைப் பெற விரும்புகிறீர்களா? என்னுடன் சேர்ந்து ஜெபியுங்கள்: “பரலோகப் பிதாவே, இன்று நான் என் பழைய வழிகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறக்கவும், ஒரு புதிய சிருஷ்டியாக மாறவும் ஒரு வாய்ப்பைப் பெற விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

