உங்களை நேசிப்பதால்தான், இயேசு உங்களுக்காக இரத்தம் சிந்தினார்
உங்களுக்கு என் மனமார்ந்த ஈஸ்டர் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்த்தெழுந்த நன்நாளின் வாழ்த்துக்கள். இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய உயிர்த்தெழுதலின் வல்லமை இன்று உங்களுக்குள் இருக்கிறது என்பதை நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்! ✝️ ஈஸ்டரின் அதிசயம் என்னவென்றால், இயேசு சிலுவையில் முழுமையான ஒரு பரிமாற்றத்தைச் செய்தார் என்பதுதான்; உங்களது பாவம், அவமானம், வியாதி, கட்டுகள், சாபம், குற்றமனசாட்சி மற்றும் ஆக்கினைத்தீர்ப்பு ஆகியவற்றை அவர் ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு, சுகமளிப்பு, மீட்பு, விடுதலை, இரட்சிப்பு மற்றும் ஒப்புரவு ஆகியவற்றை உங்களுக்குத் தந்துவிட்டார். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” (ஏசாயா 53:5) மரித்தல் அவ்வளவு எளிதான ஒரு காரியம் அல்ல. மரிக்க வேண்டும் என்பதற்காக, இயேசு உடனடியாக மரித்துவிடவில்லை, உங்களது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு, மிகவும் வேதனையான, கொடூரமான மற்றும் சித்திரவதை நிறைந்த ஒரு மரணத்தையே அவர் அடைந்தார், அதோடு கூட, வெறுப்பு, காட்டிக்கொடுக்கப்படுதல் மற்றும் அவமானம் ஆகியவற்றால் மரணம் இன்னும் மோசமானதாக இருந்தது. அன்பரே, இயேசுவின் பாடுகளின் மத்தியிலும், அவருக்கு சந்தோஷத்தைத் தந்த ஒரு விஷயம் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” (எபிரெயர் 12:2-3) அந்த மகிழ்ச்சி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மகிழ்ச்சி நீங்கள்தான், அன்பரே! இயேசுவுக்கு முன் வைக்கப்பட்டிருந்த மகிழ்ச்சி நீங்கள்தான் - சிலுவையில் அவர் மிகவும் வேதனையான மரணத்தைத் தாங்கிக்கொண்டதற்கான காரணம் நீங்கள் தான்! சில சமயங்களில், இயேசுவின் பாடுகளுக்கு நாம்தான் காரணம் என்று சத்துரு நமக்குச் சொல்ல முயற்சிக்கிறான், ஆனால் அது ஒரு பொய்! ஆம், இயேசு நம் பாவங்களை மன்னிப்பதற்காக மரித்தார், அவர் அதைத் தமது சுய சித்தத்தின்படி முழுமனதோடு செய்தார் (யோவான் 10:17-18). அவருடைய பாடுகளுக்குக் காரணமானவர்கள் நாம் அல்ல; பாடுகளை சகிக்கவே நாம் அவருக்கு உதவினோம்! உங்கள் மீது இயேசு வைத்திருக்கும் அன்பு மிகவும் ஆழமானது. பிதாவோடு உங்களை ஒப்புரவாக்கி, உங்களோடு கூட நித்தியத்தை செலவிட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு அவர் சிந்தின இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் தகுதியானது என உணர்ந்தார். (ரோமர் 5:10). இப்படிப்பட்ட அன்பை நீங்கள் எப்போதாவது ருசித்திருக்கிறீர்களா? அன்பரே, பவுலுடன் சேர்ந்து, இந்த ஈஸ்டர் நாள் அன்று நான் இந்த ஜெபத்தை உங்களுக்காக ஏறெடுக்கிறேன்: “விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.” (எபேசியர் 3:17-19) உயிர்த்தெழுதலைப் பற்றிய ஒரு பாடலைப் பாடி இயேசுவின் ஜெயத்தை நாம் கொண்டாடுவோம்.
