உங்கள் துக்கத்தின் மத்தியில் இயேசு உங்களை சந்திப்பார்

அல்லேலூயா, இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்! ✨ நீங்கள் மகிழ்ச்சியான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடினீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் உயிர்த்தெழுதலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே வேளையில், இயேசு சிலுவையில் அறையப்பட்டபிறகு அவரது சீஷர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பார்ப்போம் - ஒருவேளை ஆழ்ந்த அதிர்ச்சியில், நம்பிக்கையை இழந்து, ஏமாற்றமடைந்திருக்கலாம். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் தமது உயிர்த்தெழுதலைப் பகிரங்கமாக அறிவிக்க மக்கள் கூட்டத்தைத் தேடவில்லை. அதற்குப் பதிலாக, அவர் முதலில் தமக்கு மிக நெருக்கமானவர்களைத் தேடிச் சென்று, அவர்களது துக்கம், சந்தேகம் மற்றும் வேதனையின் சூழலில் அவர்களைச் சந்தித்தார். அடுத்த ஐந்து நாட்களில், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடந்த இந்த வல்லமை வாய்ந்த ஐந்து சந்திப்புகளைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்ப்போம். முதலாவது, மகதலேனா மரியாளுடன் நடந்த சந்திப்பு (யோவான் 20:11-18). மரியாள் வெறுமையாக திறந்திருக்கிற கல்லறையின் அருகே மனமுடைந்து, அழுதுகொண்டே நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய போதகர், அவளுடைய நம்பிக்கை, அவளுடைய எதிர்காலம் என - அவள் எல்லாவற்றையும் இழந்தவளாய் நின்றுகொண்டிருந்தாள் - இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அவள் இன்னும் அறியாதிருந்தாள். அவளால் காண முடிந்ததெல்லாம் வெறுமை மட்டுமே. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாபெரும் வெறுமையையும் இழப்பையும் குறிக்கும் கல்லறைக்கு அருகில் மரியாள் அழுதுகொண்டே நின்றபோது, இயேசு வந்து அவளிடம், “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். (வசனம் 15) இயேசு அவளது கண்ணீரைக் கண்டு, அவளது வலியை உணர்ந்தவராய், தம்மை அவளுக்கு வெளிப்படுத்தி, அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார் (வசனம் 16). அன்பரே, இயேசு மரியாளைத் தேடி வந்த சம்பவம், நம் வாழ்வில் உள்ள “வெற்று கல்லறைகளை” பற்றி சிந்திக்க நம்மை அழைக்கிறது. உங்கள் வாழ்க்கையிலும் வலி, துக்கம் அல்லது சோகம் ஆகியவை காணப்படுகிறதா, இவை என்றாவது ஒருநாள் முடிவுக்கு வருமா அல்லது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாத அளவுக்கு அவை மிகுந்த துக்கத்தை உண்டாக்குகிறதா? அன்பரே, இயேசு உங்களைச் சந்திக்க விரும்புகிறார். அவர் உங்கள் கண்ணீரைப் பார்க்கிறார்; உண்மையில், அவர் அவற்றை ஒரு துருத்தியில் சேமித்துவைக்கிறார் (சங்கீதம் 56:8). மரியாளைப் போலவே, உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழியட்டும் மற்றும் உங்கள் உள்ளம் வெறுமையை உணர அனுமதியுங்கள். நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், இயேசு உங்களை சந்தித்து, உங்களைப் பெயர் சொல்லி அழைப்பார் என்று விசுவாசியுங்கள்.

