உங்களது ஏமாற்றத்தில் இயேசு உங்களை சந்திப்பார்

இயேசுவின் வாழ்க்கையையும் அவரது குணாதிசயங்களையும் ஆராய்வது என் ஆர்வத்தை ஒருபோதும் குன்றச் செய்ததில்லை. நம் வாழ்நாள் முழுவதும் நாம் கேட்ட அதே கதைகளை மீண்டும் மீண்டும் எப்படி வாசிக்க முடிகிறது என்பதும், ஒவ்வொரு முறையும் அதை வாசிக்கும்போது, எப்படிப் புதிய வெளிப்பாடுகளைப் பெற முடிகிறது என்பதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சொல்லப்போனால், எம்மாவு எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் நடந்து சென்ற சீஷர்களுக்கு நேரிட்ட சம்பவம் (லூக்கா 24:13-35) போன்றவை, நான் தியானிக்கும் ஒவ்வொரு முறையும், எனக்கு புதிய வெளிச்சத்தைத் தரும் கதைகளில் இதுவும் ஒன்று. அந்த வாரம், அங்கு நடந்த சம்பவங்களுக்குப் பிறகு, இந்த சீஷர்கள் எவ்வளவு துயரத்தையும் குழப்பத்தையும் அடைந்திருப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள் - சிதறடிக்கப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் அவர்கள் போராடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். நடந்த அனைத்தையும் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்றும் (வசனம் 14), அவர்கள் துக்க முகத்துடன் காணப்பட்டனர் என்றும் நாம் வாசிக்கிறோம் (வசனம் 17). எனக்குப் புரிகிறது. எங்கள் மகன் ஜாக்(Zac) ஒருசில நாட்களுக்குள் பெலவீனப்பட்டு, சரிசெய்ய முடியாதபடி கடைசி நிலைக்குச் சென்றுவிட்டபோது, ஜெனியும் நானும், "இது எப்படி நடந்தது?" என்று கேட்டுக்கொண்டே இருந்தோம், அவசர கவனிப்புப் பிரிவில் இருந்து வந்த அதிர்ச்சிகரமான செய்திகளின் தருணங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன. எங்களது தற்போதைய யதார்த்த வாழ்வை ஒன்றாக இணைத்து தொடர்புபடுத்த முயன்றபோது, "இப்போது என்ன செய்வது?" என்பதை எங்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நம்மை ஏமாற்றமடையச் செய்து, நம்பிக்கையற்றவர்களாக்கி, எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. ஆனால், தங்கள் தரிசனங்களும் கனவுகளும் உடைத்தெறியப்பட்ட பிறகும், தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மீண்டும் ஒன்றாக சேர்த்து கட்டியெழுப்புவது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இருந்த இந்த இரண்டு சீஷர்களையும் இயேசு சந்தித்ததுபோல, அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் நம்மையும் அவர் சந்திக்க விரும்புகிறார். தகர்ந்துபோன நம்பிக்கைகள் மற்றும் ஏமாற்றங்களுக்கு மத்தியில் இருந்த அவர்களை இயேசு தேடிக் கண்டுபிடிகிறார். அன்பரே, அந்த இரண்டு சீஷர்களைப் போலவே, உங்களிடமிருந்து ஏதோ ஒன்று பறிக்கப்பட்டதாக நீங்கள் உணர்கிறீர்களா? ஒருவேளை உங்கள் வாழ்க்கைக்கு உயிரும் அர்த்தமும் சேர்த்த அல்லது உங்கள் அடையாளத்தை தெளிவாகத் தெரிந்துகொள்ள உதவிய ஏதோ ஒன்று உங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்களா?
அப்படியானால், இந்த இரண்டு சீஷர்களும் பேசியதைப் போலவே, அதைப் பற்றி இயேசுவிடம் பேசத் தொடங்குங்கள் என்று நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்தவைகளைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாததுபோல் காட்டிக்கொண்டார். (வசனங்கள் 18 மற்றும் 19). "எவைகள்?" என்று அவர் கேட்டார். அன்பரே, இன்று இயேசு உங்களைப் பார்த்துக் கேட்கிறார், "நீங்கள் முன்னோக்கிச் செல்லும் வழியைக் காண முடியாதபடிக்கு, எந்த விஷயங்கள் உங்கள் இதயத்தை அழுத்தி பாரப்படுத்துகின்றன?" அவற்றை அவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

