உங்கள் வருத்தத்தின் நேரத்தில் இயேசு உங்களை சந்திப்பார்

வேதாகமத்தில் உங்களுக்குப் பிடித்த நபர் யார்? எனக்கு நிறைய நபர்களைப் பிடிக்கும், ஆனால் இப்போது, தி சோசன் (The Chosen) படத்தைப் பார்த்த பிறகு - சீமோன் பேதுரு உண்மையிலேயே விசேஷமானவராகத் தெரிகிறார். இந்த கதாபாத்திரம் உண்மையாகவே உயிர்பெற்றதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இயேசுவுடனான அவரது உறவு உண்மையானது, வெளிப்படையானது மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வில் மிகவும் ஆழமானதாக இருந்தது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கடற்கரையில் அவர்கள் இருவரும் சந்தித்ததை நாம் வாசிக்கும்போது, இது இன்னும் தெளிவாகிறது (யோவான் 21:1-19). மற்ற சீஷர்களை விட, பேதுருவின் வாழ்க்கைக் கதை ஒருவேளை மிகவும் சோகம் நிறைந்ததாக இருந்திருக்கலாம். அவர் வலிமையான சீஷர்களில் ஒருவராகவும், நிச்சயமாக மிகவும் நம்பிக்கையுடன் இருப்பவராகவும், இயேசுவின் மீதான தனது அர்ப்பணிப்பைப் பற்றி தைரியமான அறிக்கைகளை வெளியிடுபவராகவும் காணப்பட்டார் (மத்தேயு 26:35). அப்படி இருந்தவர், பயத்தினால் இயேசுவை மூன்று முறை காட்டிக்கொடுத்தது மனவேதனை அளிக்கிறது. இப்படிக் காட்டிக்கொடுத்த பிறகு, அவர் எவ்வளவு அவமானத்தையும் வருத்தத்தையும் சுமந்திருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இயேசுவின் அதிர்ச்சிகரமான மரணத்தையும் மற்றும் அவரை மறுதலித்ததன் மூலமாய் அனுபவித்த துயரகரமான தோல்வியையும் எதிர்கொண்ட ஒருசில நாட்களுக்குள், பேதுரு தனது பழைய மீன்பிடி தொழிலுக்குத் திரும்பிவிட்டார், ஒருவேளை அவர் "இயல்பு" வாழ்க்கை முறைக்குத் திரும்புவதன் மூலம், தனது உணர்வுகளை மறக்க முயற்சித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். பேதுருவும் மற்ற சீஷர்களும் இரவு முழுவதும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை அவர்கள் சோர்வடைந்திருக்கலாம், எதையும் பிடிக்காததால் விரக்தியடைந்திருக்கலாம், இயேசு கரையிலிருந்து அவர்களை அழைக்கத் தொடங்கியபோது, மிகவும் பசியுடன் இருந்திருக்கலாம் (வசனம் 5). பேதுரு தவறு செய்த பிறகு, இயேசுவிடம் அவர் திரும்பி வரவில்லை; இயேசுதான் அவரிடம் வந்தார். இயேசு பேதுருவுக்காக காலை உணவைத் தயார் செய்யும்படி, கடற்கரையில் நெருப்பு மூட்டி, மீனை வறுத்து ரொட்டியை சமைத்துக்கொண்டே மிகவும் இயல்பான நிலையில் சந்திக்கிறார். இயேசுவை மறுதலித்ததால் உண்டாகிய காயங்கள் இன்னும் ஆறாத நிலையில் பேதுரு இருக்கையிலேயே, இயேசு அவரை தன்னுடன் உட்கார்ந்து சாப்பிடும்படி அழைக்கிறார். அன்பரே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெட்கப்படும் அல்லது வருத்தப்படும் விஷயங்கள் ஏதேனும் உள்ளதா? தம்மோடு கூட உட்கார்ந்து சாப்பிடும்படி இயேசு உங்களை அழைப்பதாக சற்று கற்பனை செய்து பாருங்கள். நடந்த விஷயத்தைப் பற்றியும், நீங்கள் உணரும் அவமானத்தைப் பற்றியும் அவரிடம் பேசுங்கள். உங்களிடம் இயேசு என்ன பதில் சொல்கிறார்?

