உங்கள் பயத்தில் இயேசு உங்களை சந்திப்பார்

நீங்கள் எப்போதாவது கோபத்தில் இருக்கும் ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கிறீர்களா? 2007 ஆம் ஆண்டில், காத்மாண்டு என்ற இடத்தில் யெஷுவா ஊழியங்களின் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது, அங்கு 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். பாதுகாப்புக்காக 50 மீட்டர் இடைவெளியில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் எங்களை நெருங்கிப் பார்க்க விரும்பிய கூட்டத்தினர் கலகம்பண்ணி, தடுப்புகளைத் தகர்த்துவிட்டு ஒரு கும்பலாக உள்ளே நுழைந்தனர். நான் இரண்டாவது பாடல் பாடிக்கொண்டிருந்தபோது, இராணுவத்தினர் என்னை மேடையில் இருந்து உடனடியாக பின்னோக்கி இழுத்துக்கொண்டுபோக வேண்டியிருந்தது, மேலும் எங்கள் குழுவினர் அனைவரும் தங்கள் பாதுகாப்புக்காக இராணுவ வாகனங்களுக்குள் விரைந்து சென்றனர். 😨 எனது விஷயத்தில், அங்கிருந்த கும்பல் அதிக உற்சாகமாக இருந்த, என்னுடைய ரசிகர்கள் கூட்டத்தினராய் இருந்தனர், ஆனால் அதே இடத்தில கோபமான அல்லது ஆக்ரோஷமான கூச்சல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இயேசு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஒரு காலத்தில் இயேசுவுக்கு ஆரவாரம் செய்த அதே மக்கள் அவருக்கு எதிராகத் திரும்பி, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர் (மத்தேயு 27:22-24). அந்த சம்பவங்களுக்குப் பிறகு, சீஷர்கள் தங்கள் உயிருக்கு பயந்து, பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. தங்கள் ஆண்டவர் கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்டதை அவர்கள் கண்டார்கள், அடுத்த குறி அவர்களாக இருக்கலாம் என்று எண்ணி பயந்தனர் (யோவான் 20:19). கதவுகள் பூட்டப்பட்டிருந்தபோதிலும், ஒரு அற்புதம் நடந்தது. இயேசு வந்து நடுவே நின்று: "உங்களுக்குச் சமாதானம்" என்றார். (யோவான் 20:19). பொதுவாக, இயேசு பூட்டிய கதவுகளுக்குள் நுழைந்து உள்ளே செல்லமாட்டார், தம்மை உள்ளே அழைக்கும்வரை அவர் காத்திருக்கிறவராய் இருக்கிறார். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20) இருப்பினும், இந்தக் கதை அவருடைய அழகான, வித்தியாசமான மற்றொரு பக்கத்தைக் காட்டுகிறது. சீஷர்களின் பயம் இயேசுவை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் தங்கள் கதவைப் பூட்டிவைத்திருந்ததால், இயேசுவை தவறவிடவில்லை. அன்பரே, உங்கள் வாழ்க்கையில் பயத்தால் உருவாக்கப்பட்ட “கதவுகள்” ஏதேனும் உள்ளதா? அவற்றை உங்களுக்கு வெளிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். உங்களுக்கான ஒரு நல்ல செய்தி என்ன? உங்கள் சொந்த சுவர்களுக்குப் பின்னால் நீங்கள் சிக்கி, பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் இருந்தாலும், அந்தக் கதவுகளை இனி எப்படித் திறப்பது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டாலும், இயேசு அந்தக் கதவின் வழியாகப் பிரவேசித்து உள்ளே வருவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிப்பார். நீங்கள் பயப்படும் இடத்தில் இயேசு பிரவேசிக்கையில், அவர்: “உனக்கு சமாதானம், அன்பரே! என் பூரண அன்பினால் உன் பயங்களை விரட்ட எனக்கு இடங்கொடு!” என்று உங்களைப் பார்த்துச் சொல்கிறார்.

