அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். – 2 கொரிந்தியர் 3:18

நீங்கள் வளர்ந்த பிற்பாடு என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அல்லது, நீங்கள் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய நபராக இருந்தால்... நீங்கள் இளமையாக இருந்தபோது, நீங்கள் வளர்ந்த பிற்பாடு என்ன ஆக வேண்டும் என்று விரும்பினீர்கள்?
நல்ல அப்பாக்களின் பராமரிப்பில் வளர்ந்த நாம் (நீங்கள் அப்படி வளரவில்லையென்றால் மன்னிக்கவும்), குழந்தைகளாக இருந்தபோது, நம் அப்பாவைப் போலவே வலிமையாகவும், அழகாகவும் மற்றும் கம்பீரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாமும் நம்முடைய பரலோகத் தகப்பனைப்போல இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நம்மை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார்:
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." – ஆதியாகமம் 1:27
ஆண்டவருடைய மகத்தான குணங்களை நாம் நினைக்கும்போது, நாமும் அவரைப்போலவே இருக்க விரும்புவோம், ஏனென்றால் அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மற்றும் மிகச்சரியான தந்தை ஆவார்.
- அவர் நிபந்தனையின்றி நேசிக்கிறார்
- தாராளமாக மன்னிக்கிறார்
- அவர் கோபங்கொள்ள தாமதிக்கிறார்
- அவருடைய கிருபைக்கு எல்லை இல்லை
- அவர் இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவர்
மற்றும் அவரது குணத்தைப் பற்றிய பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்...
ஆண்டவரைப்போல மாறுவது என்பது நம் பழைய சுபாவமான சுயத்தை விட்டுவிடுவதாகும்:
"ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே." – கொலோசெயர் 3:9-10
இருப்பினும், ஆண்டவரைப்போல இருக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நம் மனித சுபாவம் சில சமயங்களில் குறுக்கிடுகிறது. அந்த சமயங்களில், இந்த மறுரூபமாக்குதலின் பணி உங்களுடையது அல்ல என்பதை நினைவில்கொள்வது அவசியம்; அது உங்களில் கிரியை செய்யும் ஆண்டவருடைய செயலாகும்!
இதைப் பற்றி வேதாகமம் உங்களுக்கு உறுதியளிக்கிறது: “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” (2 கொரிந்தியர் 3:18)
அன்பரே, உங்கள் பழைய, மனுஷீக வழிகளை நீங்கள் விட்டுவிட வேண்டிய பகுதிகள் உங்கள் வாழ்க்கையில் உள்ளதா? இன்றே உங்கள் வாழ்க்கையில் மாற்றத்திற்கான கிரியையைத் தொடங்க ஜெபத்தில் ஆண்டவரை அழைப்பீர்களாக.

