என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் - ஏசாயா 49:16

உங்கள் வார இறுதி நாட்களை எப்படிக் கழித்தீர்கள்? இந்த வாரம், எனக்குப் பிடித்த வேதாகம வசனங்களில் ஒன்றான எரேமியா 29:11-ஐ தியானிப்போம் - "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11) இந்த வல்லமை வாய்ந்த வசனத்தை நாம் ஒவ்வொரு நாளும் ஆராய்வோம், அதன் அர்த்தத்தைக் கண்டறிந்து, அது நம் விசுவாசத்தைப் பலப்படுத்த அனுமதிப்போம். ஒரு வேத வசனத்தை தியானித்தல் என்பது வல்லமை வாய்ந்ததாக இருக்கலாம், ஆனால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள அதன் சூழலை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு எழுதிய கடிதத்தில் எரேமியா இந்த வார்த்தைகளை எழுதினார் (வசனம் 1). நாடுகடத்தப்பட்டு, வேறு ஒரு தேசத்தில் வாழ்வது என்பது ஒரு வேதனையான அனுபவம்; எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, உங்கள் விருப்பத்திற்கு மாறாக, முன்பின் தெரியாத ஒரு அந்நிய நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அங்கே நீங்கள் நிராகரிக்கப்பட்ட ஒரு நபரைப்போல வாழ்ந்து, உங்கள் வாழ்வை மீண்டும் புதிதாக தொடங்க வேண்டிய ஒரு சூழல் இருக்கும். ஆனால், எரேமியா மூலம், ஆண்டவர் தமது மக்களோடு பேசி, அவர்களுக்கு நினைவூட்டுகிறார்: உங்களை மறந்துவிடவில்லை. நீங்கள் நாடுகடத்தப்பட்டு வாழும் வாழ்க்கை உங்களது முடிவு அல்ல. ஏசாயா மூலம் ஆண்டவர் இதே போன்ற வார்த்தைகளைப் பேசினார்: “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.” (ஏசாயா 49:15-16) அன்பரே, நீங்கள் "நாடுகடத்தப்பட்டதாகவோ," கைவிடப்பட்டதாகவோ, மறக்கப்பட்டதாகவோ, வேரோடு பிடுங்கப்பட்டதாகவோ அல்லது இடம் மாறி போனதாகவோ உணர்கிறீர்களா? ஆண்டவர் இன்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்: “அன்பரே, நான் உன்னை மறந்துவிடவில்லை; உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருப்பதால், என்னால் உன்னை ஒருபோதும் மறக்க முடியாது. உன் நிலைமை எனக்குப் புரிகிறது, உன் கஷ்டம் என்றென்றும் நீடிக்காது. நம்பிக்கையும் சமாதானமும் நிறைந்த நல்ல திட்டங்களை நான் உனக்கு வைத்திருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன்."

