உங்கள் இதயத்தின் விருப்பம் என்று ஏதேனும் உண்டா?

என்றாவது ஒரு நாள், நான் புத்தகம் எழுத வேண்டும் என்பது என்னுடைய இலட்சியங்களுள் ஒன்று. அந்த இலட்சியம் என் மனதில் நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் அதைச் செய்ய நான் நேரம் ஒதுக்கியதே இல்லை.
அன்பரே, உங்களுக்கும் ஏதாவது ஒரு ஆசை இருக்கிறதா? உங்கள் இதயத்தில் எப்படிப்பட்ட கனவுகள், நம்பிக்கைகள் அல்லது ஆசைகள் நிரம்பியிருக்கின்றன?
இந்த வாரம், எரேமியா 29:11ல் குறிப்பிடப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளின் அடிப்படையில், ஆண்டவர் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்து வருகிறோம்:
"நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே."
இந்த வசனம் உங்களுக்காக நீங்கள் வைத்திருக்கும் திட்டங்கள் மற்றும் கனவுகளுக்கு ஒரு அழகான வாக்குத்தத்தத்தைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது 'எதிர்பார்த்திருக்கும்’ என்ற வார்த்தையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில், ஒரு வசனத்தை மற்ற வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் வாசிக்கும்போது, அதைப் புரிந்துகொள்வது நமக்கு எளிதாகிறது; இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பில் (TCV), இந்த வசனம் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:
"உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்." (எரேமியா 29:11)
ஆண்டவர், தம்முடைய திட்டங்களில், உங்களது எதிர்பார்ப்பு, உங்களது கனவு மற்றும் உங்களது விருப்பம் ஆகியவற்றையும் நினைவில் வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் ஒரு சர்வாதிகாரியாக அவர் இருக்க விரும்புவதில்லை; நீங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் காரியங்களை, நீங்கள் "எதிர்பார்த்திருக்கும் ஒரு முடிவை" அவர் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார்.
"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப்பட்டப் பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்." (சங்கீதம் 37:4-6)
அன்பரே, உங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் ஆசைகள் ஆகியவற்றைப் பட்டியலிடுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? ஒரு வேலைக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? ஒரு குடும்பத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? ஊழியத்தின் வாயிலாக பெரிய காரியங்களைச் செய்ய ஆவலாய் இருக்கிறீர்களா? அதைப் பற்றி ஆண்டவரிடத்தில் பேசுங்கள்! ஜெபத்தில் அந்தப் பட்டியலை அவரிடம் எடுத்துக் காட்டுங்கள், உங்கள் இருதயத்தை அவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

