விசுவாசிகளுக்கு நாள்தோறும் இருக்கும் ஒரு போராட்டம்

கடினமான காலங்களில் ஆண்டவரை விசுவாசிப்பது என்பதுதான் விசுவாசிகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாகும். நான் உண்மையை சொல்ல விரும்புகிறேன் - நானும் இந்தச் சவாலுடன் ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறேன்!
இந்த வாரம் நாம் தியானித்து கொண்டிருக்கும் எரேமியா 29:11ஐ வாசிக்கும்போதும் இதே கேள்வி எழுகிறது.
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”
இந்த வசனத்தை நாம் வாசிக்கும்போது, நம் சிந்தனையில் அடுத்த கேள்வி ஒன்று எழுகிறது: ஆண்டவருடைய திட்டங்கள் நமக்குத் தீங்கு விளைவிப்பதில்லை என்றால், விசுவாசிகள் சில சமயங்களில் ஏன் பாதிப்புக்குள்ளாகின்றனர்? ஆண்டவருடைய திட்டம் எப்போதும் வெற்றி பெறுவதில்லையா?
“உங்களுக்கு ஒருபோதும் தீங்கு ஏற்படாது” அல்லது “நீங்கள் ஒருபோதும் தீங்கை உணர மாட்டீர்கள்” என்று எரேமியா 29:11ஆம் வசனம் கூறவில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், சில வசனங்களுக்கு முன்பு, "தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும்" என்று (எரேமியா 29:4) ஆண்டவர் சொல்வதை நாம் வாசிக்கிறோம். நாடுகடத்தப்பட்ட இந்த வேதனையான அனுபவத்தை தம்முடைய ஜனங்கள் மீது தாமே சுமத்தியதாக ஆண்டவர் சொல்கிறாரா? 🤔
ஆம், சில சமயங்களில் ஆண்டவர் தம் ஜனங்களின் வாழ்வில் கடினமான அல்லது வேதனையான விஷயங்கள் நடக்க அனுமதிக்கிறார், ஆனால் இந்த சூழ்நிலைகளை நன்மைக்காகப் பயன்படுத்துவதும், நம்மை செழிக்கச் செய்வதும், நமக்கு நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் தருவதுமே அவருடைய திட்டம் என்பதை நாம் முழு நிச்சயமாக நம்பலாம் (எரேமியா 29:11).
"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." (ரோமர் 8:28)
வேதாகமம் நமக்குச் சொல்கிறது:
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19)
அன்பரே, உங்களுக்குத் தீங்கிழைக்கப்படுகிறது என்பதாக நீங்கள் உணர்ந்தால், தொடர்ந்து ஆண்டவரை விசுவாசியுங்கள். இது உங்கள் வாழ்வின் முடிவு அல்ல. ஆண்டவர் காற்புள்ளியை மட்டுமே வைக்கும் இடத்தில் நீங்கள் ஒரு முற்றுப்புள்ளியை வைத்து விடாதீர்கள்!

