தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, உயர்த்துவார். சங்கீதம் 27:5

ஒரு முறை நான் இந்தக் கதையை ஒருவரிடமிருந்து கேட்டேன். அது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்று எனக்குத் தெரியவில்லை, எப்படியானாலும் அது பகிர்ந்துகொள்ள தகுதியான ஒன்று:
ஒரு காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர், அமைதிக்கான சிறந்த படத்தை வரையும் கலைஞருக்கு ஒரு பரிசை வழங்குவதாக கூறியிருந்தார். பல கலைஞர்கள் படம் வரைய முயற்சித்தனர். ராஜா எல்லா படங்களையும் பார்த்தார், ஆனால் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
முதல் ஓவியம் ஒரு அமைதியான ஏரி, அதைச் சுற்றியுள்ள உயர்ந்த மலைகளை சரியாகப் பிரதிபலிப்பதைச் சித்தரித்தது. மேலே, பஞ்சுபோன்ற வெள்ளை மேகங்கள் பிரகாசமான நீல வானத்தில் மிதந்தன. அதைப் பார்த்த அனைவரும், இது அமைதிக்கான சரியான படம் என்று நினைத்தார்கள்.
எவ்வித தொந்தரவுமின்றி இருந்தது
இரண்டாவது ஓவியம் சற்று வித்தியாசமானதாக இருந்தது. அதில் மலைகள் இருந்தன, ஆனால் அவை கரடுமுரடானவையாகவும் வெறுமையாகவும் இருந்தன. வானம் புயலாலும், மழையாலும், மின்னல் பிரகாசத்தாலும் சீற்றமடைந்திருந்தது. ஒரு ஆக்ரோஷமான நீர்வீழ்ச்சி மலைப்பகுதியில் மோதியது. முதல் பார்வையில், அது அமைதியானதாகத் தெரியவில்லை.
ஆனால் ராஜா அதை உற்றுப் பார்த்தபோது, அவர் ஏதோ ஒரு விஷயத்தைக் கவனித்தார் - நீர்வீழ்ச்சிக்குப் பின்னால், ஒரு சிறிய பாறைப் பிளவில் ஒரு தாய்ப் பறவை அதன் கூட்டில் அமைதியாகவும், எவ்வித தொந்தரவில்லாமலும் அமர்ந்திருந்தது.
ராஜா இந்த ஓவியத்தை அமைதிக்கான வெற்றியின் சித்திரமாகத் தேர்ந்தெடுத்தார்.
“அமைதி என்பது சத்தம், பிரச்சனை அல்லது கடின உழைப்பு இல்லாத ஒரு இடம் அல்ல. உலகம் உங்களைச் சுற்றி இரைச்சலுடன் எழும்பும்போது, உள்ளான மனதில் அமைதியைக் கொண்டிருப்பதுதான் உண்மையான அமைதி” என்று ராஜா விளக்கினார்.
[image]
அன்பரே, அந்த தாய்ப் பறவைக்கு இருந்ததைப் போலவே, நமக்கும் ஒரு பாதுகாப்பான பாறை உள்ளது:
"கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." (சங்கீதம் 18:2)
"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." (சங்கீதம் 27:5)
அன்பரே, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் நமது சூழ்நிலைகளையோ அல்லது நமது மனநிலையையோ சார்ந்தது அல்ல. அது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.
"எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." (பிலிப்பியர் 4:7)
அன்பரே, நீங்கள் இன்னும் அந்த சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா? ஆண்டவரிடத்தில் கேளுங்கள்; அவர் அதை உங்களுக்கு இலவசமாகக் கொடுக்க விரும்புகிறார்!

