நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும் - சங்கீதம் 85:10

உணர்வுப்பூர்வமான சமாதானம் பற்றிய நமது தொடரின் கடைசி நாளுக்கு நாம் வந்துவிட்டோம். உங்களுக்காக ஆண்டவர் தந்தருளின பரிபூரண சமாதானமாகிய, அவரது ஷாலோம் உண்மையிலேயே மிகவும் உணர்வுப்பூர்வமானது! ✨
அன்பரே, நீங்கள் முழுமையாக சமாதானத்தை உணர்ந்த ஒரு தருணத்தை உங்களால் நினைவுகூர முடியுமா? அது எப்படி இருந்தது?
கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு விசேஷித்த மற்றும் பிரத்தியேகமான சமாதானம் கிடைக்கிறது! வேதாகமத்தில் இது இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது:
"எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." (பிலிப்பியர் 4:7)
இந்த பூமியில் வேறு எதுவும் உங்களை அசைக்க முடியாத அளவுக்கு உங்கள் இரட்சிப்பை நீங்கள் உறுதியாக உணரும்படியாக கிடைக்கும் சமாதானமே அது! இந்த சமாதானம் உங்களுக்கு உண்டு!
இந்த சமாதானம்:
1. உங்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் அப்பாற்பட்டது
- நாடுகளுக்கு இடையிலான சமாதானம், போர் நடக்காமல் இருந்தால் மட்டுமே சாத்தியம். - அண்டை வீட்டார் இருவருக்கும் இடையேயான சமாதானம் என்பது சண்டைகள் ஏற்படாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்- சமாதானத்துடன் இளைப்பாறுதல் என்பது நமது சரீரப்பிரகாரமான வலிகளிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது
ஆனால் ஆண்டவரிடமிருந்து வரும் சமாதானம் என்பது போர், சண்டைகள், வலி அல்லது உங்களுக்கு ஏற்படக்கூடிய சகல பூமிக்குரிய சூழ்நிலைகளின் மத்தியிலும் நிலைத்திருக்கக்கூடிய ஒன்றாகும். அது எல்லா நேரங்களிலும் எவ்வழிகளிலும் உங்களுக்கு வழங்கப்படுகிறது (2 தெசலோனிக்கேயர் 3:16).
2. உங்கள் நீதியுடன் பிரிக்கமுடியாத வகையில் அது இணைக்கப்பட்டுள்ளது
நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். (சங்கீதம் 85:9-10)
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்; அவை ஒன்றுக்கொன்று சொந்தமானவை. நீங்கள் விசுவாசியானபோது, நீதிமான்களாக்கப்பட்டீர்கள், தேவனுடைய சமாதானத்தைப் பெற்றீர்கள்:
"இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்." (ரோமர் 5:1)
சமநிலையான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலமும், சண்டையைத் தவிர்ப்பதன் மூலமும் நீங்கள் தேவனுடைய சமாதானத்தைப் பெறவோ அடையவோ முடியாது. இது எல்லா விசுவாசிகளுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது.
அன்பரே, உங்கள் சமாதானத்திற்கான விலைக்கிரயம் சிலுவையில் செலுத்தப்பட்டுவிட்டது; இன்றே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

