உலகத்தின் இழிவானவைகளை தேவன் தெரிந்துகொண்டார் 1 கொரிந்தியர் 1:28

சூழ்நிலைகளுக்கு நடுவே தப்பமுடியாமல் மாட்டிக்கொண்டதுபோல் நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா? காரியங்கள் சுமுகமாக மாறுவதற்குப் பதிலாக மேலும் கடினமாகி விஷயங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்புவதுபோல் இருக்கிறதா?
கிதியோன் அப்படித்தான் உணர்ந்தார் என்று நான் நினைக்கிறேன்.
இந்த வார தொடக்கத்தில், மீதியானியர்களிடமிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றும்படி, தனது சொந்தத் திறமைகள் மீது கிதியோனுக்கு அதிக நம்பிக்கை இல்லை என்பதை நாம் அறிந்தோம் (நியாயாதிபதிகள் 6:15).
ஆனால் அவருக்குக் காரியங்களை எளிதாக்குவதற்குப் பதிலாக, கிதியோனின் படையை 32,000 படை வீரர்களில் இருந்து வெறும் 300 நபர்களாகக் குறைத்து, ஆண்டவர் அவருக்கு நிலைமையை இன்னும் கடினமாக்க முடிவு செய்தார் (நியாயாதிபதிகள் 7:2-8).
ஆண்டவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஏனென்றால், அவர் இஸ்ரவேலர்கள் தங்களைத் தாங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்பினார்:
"அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்." (நியாயாதிபதிகள் 7:2)
சில நேரங்களில், நாம் ஆண்டவருடைய ராஜ்யத்தில் திறம்பட செயல்படுவதற்கு முன்பு, பெரும் வளங்களுடனும், பின்தொடர்பவர்கள் அநேகருடனும் நல்ல அடித்தளத்தோடு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் சிக்கிக்கொள்வோம். ஆனால் வேதாகமம் அவ்வாறு கற்பிப்பதில்லை. ஆண்டவர் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, முதலாவது அவர்களை மனிதர்களின் பாதுகாப்பு வலைகளிலிருந்து அகற்றுகிறார் என்பது மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பவுலும் இதை உணர்ந்தார்:
“உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.” (1 கொரிந்தியர் 1:28-29)
அன்பரே, உங்களிடம் இருப்பது ஆண்டவருக்காக கொடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதுபோல உணர்கிறீர்களா? ஆண்டவர் உங்களுக்கு உதவியை கூடுதலாக வழங்குவதற்குப் பதிலாக, அதை நீக்குகிறார் என்பதுபோல் உணர்கிறீர்களா? கிதியோனுக்கு நடந்ததைப் போலவே, ஆண்டவர் உங்களைத் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், மற்றும் உங்களை வெற்றிக்கான பாதையில் நிறுத்தியிருக்கிறார் என்பதை நம்புங்கள்.
நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்:
“பரலோகப் பிதாவே, உமது ராஜ்யத்தின் வளர்ச்சிக்காக மிகவும் சிறியவர்களாய் இருக்கும் ஜனங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எங்கள் சொந்த பலத்தை நாங்கள் ஒருபோதும் சார்ந்திராமல், எங்களை வெற்றிக்கு நேராக அழைத்துச் செல்ல எப்போதும் நாங்கள் உம்மை நம்பலாம் என்ற ஆசீர்வாதத்திற்காய் நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

