உங்கள் சந்தேகமோ அல்லது விரக்தியோ தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதிலிருந்து ஆண்டவரைத் தடுக்காது

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் பற்றிய நமது தொடரைத் தியானிக்கத் தொடர்வதற்கு முன், நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்:
ஆண்டவரிடமிருந்து ஒரு வாக்குத்தத்தத்தைப் பெறும்போது, உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
வேதாகமத்தில் அவருடைய வாக்குத்தத்தங்களில் ஒன்றை வாசிக்கும்போது, நீங்கள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிப்படுத்துகிறீர்கள்? அல்லது ஆண்டவர் உங்களிடம் நேரடியாகப் பேசும்போது—ஜெபம், பிரசங்கம் அல்லது வேறு ஒருவர் மூலமாக பேசும்போது கூட—நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?
நீங்கள் விசாரத்தை உணர்கிறீர்களா அல்லது மகிழ்ச்சியை உணர்கிறீர்களா? விசுவாசத்தை உணர்கிறீர்களா சந்தேகத்தை உணர்கிறீர்களா?
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நம்மை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவுமே கொடுக்கப்படுகின்றன, ஆனால் சில சமயங்களில், நம் சூழ்நிலைகளைப் பொறுத்து, அவை நமக்குள் வேறுபட்ட உணர்வைத் தூண்டக்கூடும்.
சில வாக்குத்தத்தங்கள் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம் அல்லது சந்தேகத்தை ஏற்படுத்தலாம் - குறிப்பாக நமது நிலைமை மிகவும் சிக்கலானதாகவோ அல்லது மாற்ற முடியாததாகவோ தோன்றும்போது அப்படி இருக்கும்.
“உங்கள் மகனை முழுமையாகக் குணப்படுத்துவேன் என்று ஆண்டவர் என்னிடம் சொன்னார்!” என்பதாக ஜனங்களிடமிருந்து எனக்கு அடிக்கடி செய்திகள் வருவதுண்டு, உண்மையிலேயே, ஜாக்(Zac) குணமடைவதைக் காண்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு விருப்பமில்லை. ஆனால் நான் முற்றிலும் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அத்தகைய வாக்குத்தத்தங்களைப் பெற்றவுடன், ஆண்டவருக்கு எனது ஆரம்ப பதில் பெரும்பாலும், “ஆனால் எப்போது ஆண்டவரே? இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?” என்பதாகவே இருந்தது.
சாராள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டாள். ஆண்டவர் அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் ஒரு வாரிசை வழங்குவதாக வாக்குத்தத்தம் அளித்திருந்தார், ஆனால் நாட்கள், மாதங்கள், பின்னர் வருடங்களும் கடந்து சென்றுவிட்டன. காலம் கடந்து செல்லச் செல்ல, சாராளின் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பும் விசுவாசமும் மறைந்தன. பின்னர், ஒரு நாள் வந்தது, ஆண்டவர் மீண்டும் ஆபிரகாமிடம் பேசி, "ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்" என்றார். (ஆதியாகமம் 18:10).
"சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்." (ஆதியாகமம் 18:12).
ஆனாலும், அன்பரே, வாக்குத்தத்தம் நிறைவேறியது!
ஒரு வருடம் கழித்து, ஈசாக்கு பிறந்தார் - அவருடைய பெயருக்கு "நகைப்பு" அல்லது "அவர் சிரிக்கிறார்" என்று அர்த்தம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாராள் மட்டும் சிரிக்கவில்லை - ஆபிரகாமும் சிரித்தார் (ஆதியாகமம் 17:17).
ஆண்டவர் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதை எதுவுமே தடுக்க முடியாது, உங்கள் சந்தேகமோ அல்லது விரக்தியோ கூட அதைத் தடுக்க முடியாது. வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றம் உங்களைச் சார்ந்தது அல்ல, மாறாக அது நிறைவேறுவதற்காக எல்லாவற்றையும் செய்து முடித்த இயேசுவையே சார்ந்ததாகும்!

