உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள் சங்கீதம் 139:17

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல் மற்றும் வீட்டு வேலைகள் மீது கவனம் செலுத்துதல் என இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதுதான் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது.
விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர்களாகிய நாம் நம்மை இரண்டாக (அல்லது பத்தாக) பிரித்துவைத்துக்கொள்ள முடியாது. இது நம் குழந்தைகளுக்கு நமது கவனம் தேவைப்படும்போது, அதை நாம் அவர்களுக்குக் கொடுக்க முடியாமல் போவதற்கு வழிவகுத்துவிடும். இது தவிர்க்க முடியாதது. பெற்றோரில் ஒருவரோ அல்லது இரண்டுபேருமோ, தொடர்ந்து மிகவும் அலுவலாக, கவனமின்றி அல்லது குழந்தைகளுக்கு அருகில் இல்லாத சூழலில் குழந்தைகள் வளரும்போது அது: "நீ அவ்வளவு முக்கியமான நபர் அல்ல" அல்லது "என் நேரத்தைக் கொடுக்கும் அளவுக்கு நீ மதிப்புள்ள நபர் அல்ல" என்ற ஒரு எதிர்பாராத ஆனால் என்றும் நிலைத்திருக்கும் செய்தியை விட்டுச்செல்லும்.
"ஆண்டவர் பார்க்குமளவுக்கு எனது பிரச்சனை பெரியதல்ல", அல்லது "ஆண்டவருடன் என் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், நான் முக்கியமான விஷயங்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்", அல்லது "மற்றவர்களின் தேவைகள் என்னுடையதை விட முக்கியமானதா?" என்பன போன்ற எண்ணங்களுடன் நீங்கள் எப்போதாவது போராடியிருக்கிறீர்களா? உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி சிந்திக்க ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். ஒருவேளை உங்கள் மீது கவனம் செலுத்த இயலாத வண்ணம் அலுவல் மிகுந்தவராக உங்கள் அப்பா இருந்தாரா?
உங்களுக்காக ஒரு சிறந்த செய்தி என்னிடம் உள்ளது. உங்கள் பரலோகத் தகப்பன் உங்களைப் பார்க்காமல் ஒருபோதும் இருக்க மாட்டார். உங்கள் சிறிய பிரச்சனை கூட அவரால் கவனிக்கப்படாமல் போவதில்லை. அவர் உங்களைப் பார்க்கிறார். அவர் உங்களுக்குச் செவிகொடுக்கிறார். நீங்கள் மிகவும் சிறியதாக நினைக்கும் விஷயங்களைப் பற்றி கூட, அவர் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார்.
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். (சங்கீதம் 139:16-17)
உங்கள் பெற்றோர் கவனமாக இருந்தாலும், அவர்களின் அன்பு - அதன் உச்ச நிலையிலும் கூட - ஆண்டவரின் இடைவிடாத அன்போடு ஒப்பிடுகையில் மங்கிவிடும்.
அன்பரே, கவனமின்றி இருந்த தந்தை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடையாளத்தை விட்டுச் சென்றிருந்தால், நீங்கள் தனியாக இல்லை, ஏனென்றால் உங்களுக்கு மட்டும் அப்படி நடக்கவில்லை. அந்த நிலையை ஏற்றுக்கொண்டு, உங்கள் பூமிக்குரிய தகப்பனை மன்னித்துவிட்டு, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களுக்குள் வர தைரியமாக அடியெடுத்து வைக்கவும்.

