மனித மூளையால் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது

உங்களால் ஆண்டவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் மட்டும் அப்படி உணர்ந்ததில்லை! இந்த வாரம், சற்று குழப்பம் உண்டாக்குகிறதும், அதே சமயத்தில் அழகானதுமான யோபு புத்தகத்தை தியானிப்பதன் மூலம், உங்களை ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
துன்பம் மற்றும் வாழ்க்கையின் உபத்திரவங்களுக்கு மத்தியில் புரிந்துகொள்ளுதலுக்கான ஒரு தேடல் ஆகியவைதான் இப்புத்தகத்தின் கருப்பொருள். இது என் வாழ்வுடன் ஒத்துப்போகிறது, ஏனென்றால், என் மகனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டபோது, யோபுவுக்கு நடந்ததைப் போலவே, அது மிகவும் தாங்க முடியாத வலியை எனக்கு உண்டாக்கியது. சில சமயங்களில், நான் பிறந்திருக்கவே கூடாது என்று நினைத்திருக்கிறேன் (யோபு அத்தியாயம் 3). விரக்தியின் மத்தியில், யோபு புத்தகம் எனக்கு சவாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதைப் பார்த்தேன். அடுத்துவரும் நாட்களில், யோபு புத்தகத்திலிருந்து சில போதனைகளை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
யோபு புத்தகமானது, யோபுவை உபத்திரவப்படுத்த அனுமதிக்குமாறு சாத்தான் ஆண்டவரிடத்தில் கேட்பது பற்றிய ஒரு குழப்பமான சம்பாஷணையிலிருந்து தொடங்குகிறது (யோபு 1:6-12). அவருடைய துன்பத்திற்கான காரணம் என்ன என்பது வேதத்தை வாசிக்கும் நமக்குத் தெரியும், ஆனால் மறுபுறம், யோபுவுக்கு என்ன நடந்துகொண்டிருந்தது என்பது தெரியாது.
நம்முடைய இக்கட்டான தருணங்களில், பரலோகத்தில் நடக்கும் உரையாடல்கள் பற்றி நமக்குத் தெரியாது என்பதை நினைவில்கொள்வது மிகவும் அவசியம். ஆண்டவர் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பது நமக்குப் புரிவதில்லை, ஆனால் யோபு புத்தகத்தின் முடிவில், யோபு, "நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்" என்று கூறுகிறார் (யோபு 42:3).
அழிவில்லாத நித்தியமான ஆண்டவரை நம் மனதால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்பது தான் உண்மை.
நமது பணி புரிந்துகொள்வது மட்டும் அல்ல, விசுவாசிப்பதும் கூட! “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5-6) ஆண்டவர் நல்லவர் என்பதை விசுவாசியுங்கள், சில சமயங்களில், அவருடைய வழிகள் மனிதனுடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டதாய் இருந்தாலும் அவரை விசுவாசியுங்கள்!
அன்பரே, உங்களுக்குப் புரியாத சில விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க இன்று சிறிது நேரம் ஒதுக்குங்கள், அதே நேரத்தில் இந்த ஜெபத்தை ஏறெடுத்து இன்றைய தியானத்தை நிறைவு செய்யுங்கள்: 'ஆண்டவரே, யோபுவைப் போலவே, நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகவும் சிந்திக்க வைக்கும் விஷயங்கள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், என் சுயபுத்தியின்மேல் சாயாமல், என் முழு இருதயத்தோடும் உம்மில் நம்பிக்கையாயிருப்பேன், ஆமென்.’

