விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கிறார் எபேசியர் 3:17

விசுவாசத்துக்கும் பயத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?
விசுவாசம் (ஆண்டவர் மீது வைக்கும் விசுவாசம்) எப்போதும் நல்லதுதான், அதற்காக, பயம் எப்போதுமே கெட்டது என்று சொல்லிவிட முடியாது.
உண்மையில், ஆரோக்கியமானதும், ஆண்டவர் நமக்குக் கொடுத்திருப்பதுமான ஒரு உணர்ச்சிதான் பயம். இது ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்ட இயற்கை உள்ளுணர்வாக இருக்கிறது. எவ்வித பயமும் இன்றி, காட்டில் வாழும் ஒரு புலியை நீங்கள் எதிர்கொள்வதை சற்று கற்பனை செய்து பாருங்கள்... அப்படியானால் உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தம்! 😵
சில சமயங்களில், விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டுமானால், நாம் எவ்வித பயத்தையும் கொண்டிருக்கக் கூடாது என்று நமக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நமக்குள் பயம் இல்லை என்பதால், விசுவாசம் நிரம்பி இருக்கிறது என்று அர்த்தமல்ல - அது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. எந்த பயமும் இல்லாத ஒரு மனிதன் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்து விளைவித்து விடக் கூடும்.
நான் இன்னும் சற்று விளக்கமாக சொல்கிறேன்: பயம் இல்லையென்றால், உங்களுக்கு விசுவாசம் தேவைப்படாது.
இதை ஒரு நிமிடம் சிந்தித்து நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். 🤔
இதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள் - உங்கள் பிரச்சனையைக் குறித்து உங்களுக்கு பயம் இல்லை, உங்கள் விண்ணப்பத்தை ஆண்டவர் கேட்பாரா அல்லது கேட்க மாட்டாரா என்ற சந்தேகம் இல்லை, அல்லது ஒரு காரியம் நிச்சயம் நடக்கும் என்று நம்பி, அதைக் குறித்த பயமோ அல்லது சந்தேகமோ உங்களுக்குத் துளியும் இல்லை, அப்படி என்றால், ஆண்டவரை நம்புவதற்கான விசுவாசம் உங்களுக்கு ஏன் தேவைப்படும்? நிச்சயமற்ற தன்மை இருக்கும்போதுதான், நமக்கு விசுவாசம் தேவைப்படுகிறது. அந்தத் தருணங்களில், நமக்கு ஒரு தேர்வுக்கான வாய்ப்பு கிடைக்கிறது: கவலைப்படுவதா அல்லது ஆண்டவர் வருவார் என்று விசுவாசித்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதா என்பது நமது கரத்தில்தான் உள்ளது.
"ஆண்டவரை விசுவாசிக்க வேண்டும் என்று நம்மை ஊக்குவிப்பதற்காக மட்டுமே ஆண்டவர் ஏன் பயம் போன்ற உணர்ச்சியுடன் நம்மை வடிவமைத்திருக்கிறார்?" என்று ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம்.
அவர் ஏன் அப்படி செய்தார் என்றால், நீங்கள் இயற்கையாக உங்களுக்குள் வைக்கப்பட்டுள்ள உள்ளுணர்வை விசுவாசிக்கிறீர்களா அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவரை விசுவாசிக்கிறீர்களா என்பதைத் தேர்வுசெய்வதில் நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். நாம் அவர்மீது விசுவாசம் வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெதையும் அவர் விரும்பவில்லை, ஆனால் மாற்றி தேர்வு செய்வதற்கான வழி நமக்கு இல்லாவிட்டால், அதாவது பயம் என்ற உணர்வு நமக்கு இல்லாவிட்டால் விசுவாசத்தை உண்மையில் விசுவாசமாக கருத முடியாது.
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்." (எபிரெயர் 11:6)
அன்பரே எபேசியர் 3:16-19 வசனங்களில், பவுலின் வார்த்தையால் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தை உங்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன்.
"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்."

