அளவற்ற செல்வாக்கு

இந்நாட்களில், சிலர் சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்ற நபராக இருப்பதைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களைப்போலவே மற்றவர்களையும் நடிக்க வைப்பதன் மூலமும், வாழ வைப்பதன் மூலமும், பணத்தை செலவழிக்க வைப்பதன் மூலமும் தங்களுக்கான பணத்தை சம்பாதிக்கிறார்கள். அன்பரே, ஆண்டவர் உங்களையும் ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருக்க அழைத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் ஒரு செல்வாக்கு பெற்ற நபராக இருக்க அழைக்கப்படுகிறீர்கள். ஒரு பெரிய சமூக ஊடகத்தால் பின்தொடரப்படாவிட்டாலும் அல்லது ஒரு முக்கிய பதவி உங்களுக்கு இல்லாவிட்டாலும் கூட, குடும்பத்தினர், நண்பர்கள், சகபணியாளர்கள் அல்லது அந்நியர்களுடனான உங்களது அன்றாட தொடர்புகள் — அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் வாழ்வு உங்களைச் சுற்றியுள்ளவர்களை வடிவமைக்கிறது மற்றும் அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் எவ்விதமான செல்வாக்கைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு வேதாகமம் சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது:
"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34-35) “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;" (கொலோசெயர் 3:12)
நீங்கள் இவ்வாறு வாழ தெரிந்துகொள்ளும்போது, மற்றவர்களுக்கு அன்பு, இரக்கம், உதாரத்துவம், பணிவு மற்றும் இன்னும் அநேக நற்குணங்களை வெளிப்படுத்துவதன் மூலம், உங்கள் வாழ்க்கை ஆண்டவரின் மகிமையை வெளிப்படுத்த அளவுகடந்த செல்வாக்கு பெற்றதாக மாறும்!
"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; ... நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." (மத்தேயு 5:13-14,16)
ஆண்டவர் உங்களை அவருடைய ராஜ்யத்திற்காக செல்வாக்கு செலுத்தும் நபராகவும், ராஜ பணியின் தூதராகவும் மாற்ற விரும்புகிறார். இதில் நீங்கள் தனியாக இல்லை என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறது; இயேசு ஒவ்வொரு நாளும் ஒரு அதிசயத்தை செய்து உங்களை வழிநடத்தி, உங்களுக்குத் துணையாக வருகிறார்.

