அளவற்ற பங்கு

‘ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி’ என்ற தொடரை 3வது நாளாக நாம் தியானிக்கப் போகிறோம். நீங்கள் இன்னும் ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவதாக உணர்கிறீர்களா? தாவீது ராஜா இந்த வசனத்தை எழுதியபோது, ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவதாக உணர்ந்ததை நாம் புரிந்துகொள்ளலாம்:
“உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்." (2 சாமுவேல் 22:30)
தாவீது தனது வாழ்க்கையில் அநேக யுத்த சேனைகளை சந்தித்தார் (அவர் எல்லா நேரத்திலும் உண்மையிலேயே யுத்தத்துக்குச் சென்றார்) மற்றும் ராஜாவாகும் பயணத்தில் எண்ணற்ற மதில்களைத் தாண்ட வேண்டி இருந்தது. தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதிலிருந்து அவர் இறுதியாக சிங்காசனத்தில் அமர்ந்த நாள் வரை ஏறக்குறைய 30 ஆண்டுகள் கடந்துவிட்டதாக சிலர் மதிப்பிடுகின்றனர். அவர் இறுதியாக ராஜாங்கத்தை அடைய மதிலைத் தாண்டினார்! தாவீது கையாண்ட ரகசிய யுக்தி என்ன? இங்கே "உம்மாலே" என்பது முக்கியமான வார்த்தை. "உம்மாலே/ உமது உதவியால்... தேவனாலே", என்ற வார்த்தைகளை உபயோகிப்பதிலிருந்து, ஆண்டவர் இல்லாமல் தான் பெலனற்றவர் என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார் என்பதை நாம் காணலாம். எல்லாவற்றையும் ஆண்டவரின் துணையால் செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார். "தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்..." என்று சங்கீதம் 108:13ல் தாவீது மறுபடியும் கூறுகிறார். நீங்கள் அவராலும் அவர் மூலமாகவும் எல்லாவற்றையும் செய்யும்படிக்கு, அதேபோன்ற அளவற்ற பலத்தை ஆண்டவர் உங்களுக்குத் தருவதாக வாக்களிக்கிறார்!
"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." (பிலிப்பியர் 4:13)
ஆண்டவருடனான நெருக்கமான, ஆழமான மற்றும் உண்மையான உறவின் பலத்துக்கு ஈடாக உங்கள் வாழ்க்கையில் வேறு எதையும் கொண்டிருக்க முடியாது. அன்பரே, நீதிமொழிகள் 16:3 சொல்வதுபோல், உங்கள் திட்டங்கள், உங்கள் முயற்சிகள் மற்றும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களில் ஆண்டவரை அழைக்க இன்று உங்களை ஊக்குவிக்கிறேன்.
"உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்."
இந்த ஜெபத்தை நீங்கள் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கலாம்: “பரலோகத் தகப்பனே, எனது வேலை, பள்ளிப் படிப்பு, குடும்ப வாழ்க்கை மற்றும் எனது எல்லா செயல்பாடுகளுக்கும் நடுவில் உம்மை அழைக்கிறேன். நான் என் வாழ்க்கையை உம்முடன் வாழ விரும்புகிறேன், நீர் இல்லாமல் நான் தனியே வாழ விரும்புவதில்லை. தாவீதைப்போல உமது உதவியுடன் என்னால் எதையும் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

