நம் தேவைகளை சந்திப்பதில் ஆண்டவர் வல்லமையுள்ளவர்

நான் எதிர்பார்க்காத வழிகளில் ஆண்டவர் எனக்கு எப்படி உதவி செய்தார் என்பதற்கு எண்ணற்ற சம்பவங்கள் என்னிடம் உள்ளன. எங்கள் மகனின் மருத்து செலவுக்கான கட்டணத்தை எங்களால் ஒரேயடியாகச் செலுத்த முடிந்ததுதான் மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்று! 😮 எங்கள் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உண்மையிலேயே எங்களின் வங்கிக் கணக்குகளில் பணம் எதுவும் இல்லாமல் இருந்தன, ஆனால் 64 நாட்களுக்குப் பிறகு, அவனை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோகும் நேரம் வந்தபோது, அவனது அனைத்து மருத்துவக் கட்டணத்தையும் செலுத்தித் தீர்ப்பதற்குப் போதுமான பணம் எங்களிடமிருந்தது. இவை அனைத்தும் ஆண்டவரின் அற்புத செயலாக இருந்தது. உண்மையில், எங்கள் மகன் குணமடைவதைப் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் உள்ளார்ந்த விருப்பம். அது நடக்கவில்லை (இன்னும்), ஆனாலும் இதற்கிடையில், பெரிதும் சிறிதுமான எண்ணற்ற வழிகளில் ஆண்டவரின் அன்பை நாங்கள் உணர்கிறோம். வேதாகமம் இவ்வாறு வாக்களிக்கிறது:
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." (பிலிப்பியர் 4:19)
"தம்முடைய ஐசுவரியத்தின்படி... மகிமையிலே நிறைவாக்குவார்" என்ற வார்த்தைகள் என்னைத் தொட்டன. ஆண்டவர் நம் தேவைகளை பூர்த்தி செய்யும்போது, அவர் நாம் ஆச்சரியப்படும் வண்ணம் கிரியை செய்கிறார்:
- அவர் பெரும்பாலும் எதிர்பாராத விதத்தில் நமக்கு பதில் அளிப்பார்; வலது பக்கமாக வலையை வீசும்படி இயேசு பேதுருவுக்கு அறிவுறுத்தியது போல, சில சமயங்களில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக பதில் அளிப்பார். (யோவான் 21:6-11)
- அவரது பதில்கள் தொடர்ந்து நமது தேவைக்கும் மேலாக எல்லாவற்றையும் பூர்த்தி செய்கின்றன. இயேசு வெறும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து அநேக மக்களை போஷித்த பின்னர், எஞ்சியவற்றை 12 கூடைகள் நிறைய சேகரித்தபோது, சீஷர்கள் இதை அவர்கள் வாழ்வில் அனுபவித்தனர் (மாற்கு 6:43)
- அவர் பெரும்பாலும் நம்புவதற்கு ஆச்சரியமான வழிகளைப் பயன்படுத்துகிறார்; எண்ணெயை விற்றுக் கடனை அடைத்த ஏழை விதவையின் கதையைப்போல அற்புதமான காரியங்களைச் செய்கிறார், அவளுடைய ஒரே ஒரு எண்ணெய் குடுவை அவளுடைய கடனைச் செலுத்துவதற்கும், மீந்ததை அவளுக்காகவும் அவளது இரண்டு குழந்தைகளுக்காகவும் வைத்திருப்பதற்கும் போதுமானதாக இருந்தது. (2 இராஜாக்கள் 4:1-7)
ஆண்டவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கும்போது, தம்முடைய ஐசுவரியத்தையும் மகிமையையும் தமது அளவற்ற உதாரத்துவத்தின் மூலமும் முடிவில்லாத இரக்கத்தின் மூலமும் வெளிப்படுத்துகிறார். அன்பரே உங்கள் தேவைகள் அனைத்தையும் பட்டியலிட்டு, பின்னர் அவற்றை ஜெபத்தில் ஆண்டவரிடத்தில் ஒப்படைத்துவிடுமாறு இன்று உங்களை ஊக்குவிக்கிறேன். கிறிஸ்து இயேசுவில் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே அவர் ஒவ்வொரு தேவைகளையும் சந்திப்பார் என்று நீங்கள் விசுவாசிப்பதை ஆண்டவரிடத்தில் சொல்லுங்கள்.

