ஒருவனும் தனித்து விடப்படுவதில்லை 🏝
என் வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்தில், நான் மிகவும் வேதனையான ஒரு சூழ்நிலையைச் சந்தித்தேன், மற்றவர்களிடமிருந்து என்னை முழுவதுமாக விலக்கி, என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். அந்த நேரத்தில், அப்படிச் செய்வது சரிதான் என்று எனக்குத் தோன்றியது - ஆனால் தனிமை என்னை மிகவும் பெலவீனமான ஒரு நபராக மாற்றும் என்பதை நான் உணராதிருந்தேன். என் எண்ணங்களுடனும் துக்கத்துடனும் தனிமையில் விடப்பட்டதால், நான் மனச்சோர்வில் மூழ்கிவிடும் வாய்ப்பு எனக்கு சற்று அதிகமாகவே இருந்தது.
உண்மையைச் சொல்லப்போனால், ஆண்டவர் நம்மை தீவுகளைப் போல தனித்து வாழ படைக்கவில்லை. நாம் சமுதாய மக்களோடு இணைந்து வாழவே படைக்கப்பட்டோம் - முதலில் அவருடன் இணைந்து வாழ வேண்டும், பின்னர் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டும்.
அதனால்தான் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியலில் மூன்றாவதாக உள்ள விஷயம்: ஆண்டவருடைய மக்கள்.
நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டியது அவசியமாகும்!
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். (எபிரெயர் 10:24-25)
நீங்கள் இன்னும் இதைச் செய்யவில்லை என்றால், ஒரு உள்ளூர் திருச்சபையைக் கண்டுபிடித்து அதில் ஒரு உறுப்பினராக சேர்ந்துகொள்ள நான் உங்களை ஊக்குவிக்கிறேன். மிகச்சரியான ஒரு திருச்சபையைத் தேடிச் செல்லுங்கள் என்று நான் சொல்லவில்லை - ஏனென்றால், எல்லாவற்றிலும் சரியாய் விளங்கும் ஒரு திருச்சபை என்று சொல்லத்தக்கதான ஒரு சபை இல்லை - ஆனால் விசுவாசிகள் கற்றுக்கொள்கிறதற்கும், வளர்வதற்கும், மற்றும் அன்பினால் ஒருவருக்கொருவர் உதவுகிறதுக்கும் அது ஒரு நல்ல இடமாக இருக்கும்.
காயப்படுத்திவிடுவார்களோ என்று பயப்பட வேண்டாம்; மிகவும் நல்ல கிறிஸ்தவர்கள் என்று நீங்கள் நினைத்தவர்கள் கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தக் கூடும், ஆனால் அப்படிப்பட்ட அனுபவம் உங்களை மற்ற சகோதர சகோதரிகளுடன் கிறிஸ்துவுக்குள் ஐக்கியங்கொள்வதைத் தடுக்க அனுமதிக்காதீர்கள்.
தேவ பிள்ளைகளோடு சார்ந்திருப்பது ஒரு நல்ல யோசனை மட்டுமல்ல - அது ஒரு உயிர்நாடியாகும். குறிப்பாக நமது கடினமான காலங்களில், கிறிஸ்துவுக்குள்ளான நம் சகோதர சகோதரிகள் நம்மைச் சூழ்ந்திருப்பது நமக்கு அவசியமாகும்.
சினேகிதன் எல்லாக் காலத்திலும் சினேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான் (நீதிமொழிகள் 17:17)
ஜாக்(Zac) நோய்வாய்ப்பட்ட காலகட்டம், அவனது மறைவு போன்ற வேதனையான பயணத்தின்போது, தேவ ஜனங்களின் உண்மையுள்ள சமூகத்தால் சூழப்பட்டிருந்ததால் வலிமை, ஆறுதல் மற்றும் ஆதரவை ஜெனியும் நானும் நேரடியாக அனுபவித்தோம்.
அதிசயத்தை ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்குக் கொண்டுவருவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்ததற்கான ஒரு காரணம் இதுதான், ஜெனியும் நானும் எழுதி கையொப்பமிடுகிற இந்த மின்னஞ்சல்களுக்குப் பின்னால், ஒரு முழு அதிசயம் குடும்பம் ஜெபிக்கிறது, விசுவாசிக்கிறது மற்றும் உங்களுடன் துணை நிற்கிறது.
நீங்கள் எப்போதாவது தனியாக இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது எங்களுடன் தொடர்புகொள்ள விரும்பினாலோ, எங்களது மின்னஞ்சல்களில் ஒன்றிற்கு பதிலளிக்கத் தயங்காதீர்கள். உங்களிடமிருந்து வரும் செய்தியைக் கேட்கவும் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கவும் நாங்கள் ஆர்வமாய் இருக்கிறோம்.
