அது மறந்துவிடு!
நீங்கள் ஒருவேளை தவறவிட்டிருந்தால் உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன், பற்றிக்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்களையும், அர்ப்பணிக்க வேண்டிய மூன்று விஷயங்களையும் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கான நான்காவது நாளுக்கு நாம் வந்திருக்கிறோம்.
இதுவரை, பற்றிக்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினோம். பற்றிக்கொள்ள வேண்டியவை, ஆண்டவரின்:
- பிரசன்னம்
- சட்டதிட்டங்கள்
- மக்கள்
இன்று, நாம் அர்ப்பணிக்க வேண்டியவற்றை ஆராய்ந்து பார்க்கும்படி கடந்து செல்வோம், முதலாவதாக நமது கடந்த காலத்திலிருந்து துவங்குவோம்.
பவுல் பிலிப்பியர் 3:13ல் இவ்வாறு எழுதுகிறார் :
“சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி…”
பின்னானவைகளை மறந்துவிடுவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முக்கியமான ஒன்றாகும். பிசாசு எப்போதும் நமது கடந்த காலத்தை ஞாபகப்படுத்த முயற்சிப்பான், குறிப்பாக நமது பாவங்கள் மற்றும் தவறுகளை நினைவூட்ட முயற்சிப்பான். ஒருவர் வெற்றி பெற்றாலும் சரி அல்லது தோல்விகளைத் தழுவினாலும் சரி, பொதுவாக உலகம் கூட அவர்களின் கடந்த காலத்தை வைத்தே அவர்களை வரையறுக்கிறது.
ஆனால் பவுல் அந்தக் கண்ணோட்டத்தை நிராகரிக்கிறார்:
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:16-17)
அப்படியானால், நாம் செய்த சகல தவறான காரியங்களுக்கும் என்ன பதில்? வேதாகமம் கூறுகிறது:
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். (சங்கீதம் 103:11-12)
இதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஆண்டவரே உங்கள் கடந்த காலத்தை விட்டுவிட முடிந்தால், நீங்கள் ஏன் இன்னும் அதைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்?!?
அடுத்த முறை பிசாசு உங்கள் கடந்த காலத்தை உங்களுக்கு நினைவூட்ட முயற்சிக்கும்போது, அவனுடைய எதிர்காலத்தை அவனுக்கு நினைவூட்டுங்கள். (மத்தேயு 25:41)
உங்களது கடந்த காலம் மிக அழகானதாக இருந்தாலும் சரி, அல்லது மிகவும் உடைந்துபோனதாக இருந்தாலும் சரி, கடந்த காலத்தில் வாழ்வதை நிறுத்துங்கள், அதற்குப் பதிலாக முன்னோக்கிப் பார்க்கத் தொடங்குங்கள். ஏனென்றால் ஆண்டவர் உங்களுக்காக இன்னும் பல அற்புதமான திட்டங்களை வைத்திருக்கிறார்! (எரேமியா 29:11)
என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுங்கள்:
பரலோகத் தகப்பனே, இன்று நான் என் கடந்த காலத்தை உம்மிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். அதை எனக்கு எதிராகத் திருப்பிவிடாததற்கு நன்றி. நீர் என்னைப் பார்க்கிறபடியே, நானும் என்னைப் பார்க்கவும், எனக்காக நீர் வைத்திருக்கிற பிரகாசமான மற்றும் அழகான விஷயங்களில் கவனம் செலுத்தவும் எனக்கு உதவுவீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
