வெறுக்கப்பட்ட சமாரியன்
இந்த வாரம் உங்களுக்கு இனிதாக அமைந்திருக்கிறதா?
இந்த வாரம் நல்ல சமாரியன் உவமையை நாம் அலசி ஆராய்ந்து தியானித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கக்கூடிய ஒரு விஷயங்களை இங்கே காண்போம் - உண்மையில் இயேசு அந்த நபரை "நல்ல" சமாரியன் என்று ஒருபோதும் அழைக்கவில்லை. அதற்கு மாறாக, அவர், சமாரியன் என்றுதான் அவனை அழைக்கிறார். சொல்லப்போனால், அந்நாட்களில் ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் போன்ற யூதர்களால் வெறுக்கப்பட்டவர்களாகவே சமாரியர்கள் இருந்தனர். ஆகவேதான், அவன் மற்றவர்களால் வெறுக்கப்பட்ட ஒரு நபர் என்பதைக் குறிப்பிடும் வகையில் இயேசு சமாரியன் என்று அந்த நபரை அழைக்கிறார் (லூக்கா 10:33).
நீங்கள் வெறுக்கக்கூடிய நபர்கள் யாராவது இருக்கிறார்களா?
ஆம், இருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்வது எனக்குப் பிடிக்காதுதான், ஆனாலும், நான் எவ்வளவு அதிகமாக எல்லோரையும் நேசிக்க முயற்சிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக, ஒரு சிலரை நேசிக்க முடியாமல், எதிர்மறையான கருத்து மற்றும் விரக்தியுடன் நான் போராடுகிறேன். நான் வெறுக்காமல் இருக்க மிகவும் போராடும் ஒரு மக்கள் குழு எது? வெறுப்பைப் பரப்புவதற்காக மதத்தையும் வேத வாக்கியங்களையும் பயன்படுத்தும் ஒரு கூட்ட மக்கள்தான் அவர்கள் - குறிப்பாக ஆன்லைனில் அப்படிச் செய்பவர்களை வெறுக்காமல் இருக்க, நான் மிகவும் போராடுவதுண்டு. அவர்களை நேசிப்பது எனக்கு மிகக்கடினம், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன்.
கதையின் நாயகனை வெறுக்கப்பட்ட ஒரு நபர் என்பதற்கான அர்த்தத்தில் இயேசு குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் அந்த நபரை வெறுத்ததால் அவ்வாறு அழைக்கவில்லை, மாறாக, அவரோடு கூட இருந்தவர்கள், முக்கியமாக பரிசேயர்கள் மற்றும் சீஷர்கள் கூட, சமாரியனை அப்படித்தான் பார்த்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்ததால், அவ்வாறு அழைத்தார்.
சமாரியர்கள் தங்கள் நம்பிக்கைக்குப் புறம்பான துரோகிகளாகக் கருதப்பட்டனர், மற்றும் யூதர்களால் வெறுக்கப்பட்டனர்.
சமாரியர்கள் அந்நிய ஜாதிகளுடன் கலந்த இஸ்ரவேலர்களின் ஒரு இனமாக இருந்தனர். அவர்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுத்து, மற்ற மக்களுடன் கலந்துவாழ்பவர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் மற்ற அந்நிய தெய்வங்களை வணங்கினர் மற்றும் நியாயப்பிரமாணத்தைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர் (2 இராஜாக்கள் 17:24-41).
கதையில் வந்த அனைத்து வழிப்போக்கர்களிலும், சரியானதைச் செய்வதற்கான வாய்ப்பு ஒரு சமாரியனுக்கு மிகக் குறைவு என்பதாகவே, இயேசுவின் உவமையை கேட்டுக்கொண்டிருந்த யூதர்களது பார்வை இருந்தது.
இயேசு சமாரியனை கதாநாயகனாக சித்தரித்ததன் மூலம், அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியிருந்த தவறான எண்ணங்களை அவர்களுக்குச் சுட்டிக்காட்டியது மட்டுமல்லாமல், அவர்களது சுயநீதியையும் அம்பலப்படுத்தினார்.
இதைப்போலவே, உவமையானது நாம் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களை நமக்கு வெளிப்படுத்த முடியும்.
உங்கள் வாழ்க்கையில் யாரை சமாரியனாகப் பார்க்கிறீர்கள்? நீங்கள் நிராகரிக்கும் நபர் யார்? இவர்கள் எனக்கு நன்மை செய்ய வாய்ப்பே இல்லை என்று நீங்கள் எந்தக் கூட்டத்தினரைப் பற்றி நினைக்கிறீர்கள்?
ஏற்றுக்கொள்ள உங்களுக்குக் கடினமாக இருக்கும் ஒரு நபரை (நபர்களை) உங்களால் அடையாளம் காண முடிந்தால், நீங்கள் உங்கள் வெறுக்கப்பட்ட சமாரியனைக் கண்டுபிடித்து, இயேசுவின் உவமையைப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டீர்கள்.
என்னைப் பொருத்தவரை, கைபேசியில் தொடுதிரையை மேல் நோக்கித் தள்ளிக்கொண்டே, மக்களால் பதிவிடப்பட்ட கருத்துக்கணிப்புகளை வாசிக்கும்போது, உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் இன்னும் கடினமாக முயற்சிக்க வேண்டும்.
நீங்களும் இப்படித்தான் செய்வீர்களா?
