நீங்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு மற்றும் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறீர்களா?
இந்த வாரம் நாம் நல்ல சமாரியனின் கதையை ஆராய்ந்து பார்த்து தியானித்துக்கொண்டிருக்கிறோம் (லூக்கா 10:25-37 வரையுள்ள வசனங்களில் இதை வாசிக்கலாம்). உண்மையை சொல்லப்போனால், சில சமயங்களில் இந்த உவமையை வாசிப்பது எனக்குக் கடினமாக இருக்கிறது. மற்றவர்கள் எனக்கு போதுமான அளவு உதவிகள் செய்யவில்லை அல்லது இன்னும் அதிகமாக உதவி செய்ய எப்போதும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகி, அது என்னை சற்று பாரப்படுத்திவிடும்.
ஆனால் அது உவமையின் நோக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே. இந்த வார தொடக்கத்தில் நாம் ஆராய்ந்தது பார்த்ததுபோல், அது நமக்கு சவால் விடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது - நமது இதயத்தை சரிபார்க்கத் தூண்டுகிறது. நாம் உண்மையிலேயே மற்றவர்களை மிகுந்த அக்கறையுடன் நேசிக்கிறோமா மற்றும் செயலில் நமது அன்பை வெளிப்படுத்துகிறோமா என்று.
இருப்பினும், வாழ்வின் சுமைகளால் உண்டாகும் பாரத்தை நாம் உணரும்போது, நமது சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்படும்போது அல்லது மற்றவர்களால் தாக்கப்படும்போது, இந்த உவமையானது நாம் மற்றவர்களுக்கு அதிகமாக உதவி செய்ய வேண்டும் என்பதை போதிப்பதாக மட்டுமல்லாமல், நமக்கு உதவி தேவைப்படும்போது, நமக்கு உதவ ஒரு நல்ல சமாரியன் இருக்கிறார் என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வது நல்லது.
இயேசு தாமே நமக்கு நல்ல சமாரியனாக இருக்கிறார்.
மத்தேயு 9-ஆவது அதிகாரத்தில், இயேசு தாம் சந்தித்த எல்லா ஜனங்கள் மீதும் மனதுருக்கமுள்ளவராய் இருந்தார் என்றும், துன்புறுத்தப்பட்ட அவர்களை குணப்படுத்தினார் என்றும் நாம் வாசிக்கலாம்; ஏற்கனவே இதை வாசித்ததுபோல் தோன்றுகிறதா?
பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, (மத்தேயு 9:35-36)
நீங்கள் சமீப காலமாக துன்புறுத்தப்பட்டதாக, காயமடைந்ததாக, கொள்ளையடிக்கப்பட்டதாக உணர்ந்தால், உங்கள் காயங்களை ஆற்றி குணப்படுத்தவும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இயேசுவுக்கு உங்கள் குழப்பத்தின் நடுவில் இடங்கொடுக்கவும். உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல சமாரியனின் உதவி உங்களுக்குத் தேவை என்பதை ஒப்புக்கொண்டு, மீதமுள்ள காரியங்களை ஆண்டவர் செய்யும்படி அனுமதியுங்கள்.
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். (சங்கீதம் 103:13)
நாம் ஒன்றாக சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுப்போம்:
பரலோகத் தகப்பனே, உமது எல்லையில்லா மனதுருக்கத்திற்கும், உமது உதாரத்துவமான அன்புக்கும், என் மீது நீர் வைத்திருக்கும் உமது தன்னலமற்ற அக்கறைக்கும் நன்றி. என் இருதயத்தில் உடைந்துபோயிருக்கிற மற்றும் வேதனையடைந்திருக்கிற பகுதிகளுக்குள் நீர் வர வேண்டும் என்று உம்மை அழைக்கிறேன். என் வாழ்க்கைக்கான நல்ல சமாரியனாக நீர் எனக்குள் வர வேண்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
