அவர்கள் காயப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!!
நான் வளர்ந்த காலத்தில் பெரிய அளவில் பயமுறுத்தப்படவில்லை என்பது ஒருவகையில் நல்ல விஷயம் தான், ஆனால் பள்ளியில் எனக்கு சில அனுபவங்கள் உண்டு. சில மாணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், அவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை கடினமாக்கினர், ஆனால் தப்பித்துக்கொண்டே இருந்தார்கள்.
உங்களுக்கு பிடிக்காத யாரோ ஒருவர் அல்லது பிடிக்காத ஒரு கூட்ட மக்கள் இருக்கிறார்களா? ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது கெட்டது நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்களை வெறுக்கிறீர்களா?
இது நல்லது அல்லது ஆரோக்கியமானது என்று நான் சொல்லவில்லை, ஆனால் இப்படி உணருவது மனிதர்களுக்கு மிகவும் இயல்பானது.
யோனாவுக்கும் இப்படி ஒரு வெறுப்பு உணர்வு இருந்தது; நினிவே நகரத்து மக்களை அவன் வெறுத்தான். அதனால்தான், அவர்களை சந்தித்து பிரசங்கம் செய்யும்படி ஆண்டவர் அவனிடம் சொன்னபோது, யோனா எதிர் திசையில் ஓடினான் (யோனா 1:2-3).
ஏன்னென்றால் அவர்கள் மனம் திரும்பினார்கள் என்றால் இரட்சிக்கப்பட்டுவிடுவார்கள் என்று அவன் பயந்தான். அதற்குப் பதிலாக அவர்கள் அழிக்கப்படுவதையே அவன் விரும்பினான் (யோனா 4:1-2).
நினிவே நகரத்து மக்கள் மீது யோனா ஏன் இவ்வளவு வெறுப்புடன் இருந்தான், ஏன் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்பினான் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காரணம் எதுவாகிருந்தாலும், அவன் இதயம் அவர்களுக்கு எதிராகக் கடினமாக இருந்தது.
ஆனாலும் திருப்புமுனை இதுதான்: இருந்தும்கூட ஆண்டவர் அவனை அனுப்பினார்.யோனாவை அவன் நண்பர்களிடம் அல்ல, தன் எதிரிகளிடம் ஊழியத்திற்கு அனுப்பினார் (யோனா 3:4-10).
இயேசுவும் நம்மிடம் அதையே செய்யச் சொல்கிறார்.
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்." - மத்தேயு 5:44-45
உங்கள் எதிரிகள் யார், அவர்களை உங்களால் உண்மையிலேயே நேசிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
அது எளிதானது அல்ல. ஆனால் ஆண்டவரின் உதவியால், அது சாத்தியமாகும்.
நாம் ஒன்றாக ஜெபிப்போம்: பரலோகத் தகப்பனே, என் வாழ்க்கையில் உமது இரக்கத்திற்காக நன்றி. இன்று நான் என் எதிரிகளை நேசிக்கவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் தேர்ந்துகொள்கிறேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த பிழைகளை மன்னிக்கவும், முழுஉள்ளத்தோடு அவர்களுக்கு நன்மைகள் நடக்க விரும்பவும் எனக்கு பலம் தாரும். அவர்கள் வாழ்க்கையில் உமது அளவில்லா ஆசீர்வாதங்கள் உண்டாகவும், உமது அன்பால் நிரப்பப்படவும் நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
