'காணாதிருந்தும் விசுவாசிப்பது'
'காணாதிருந்தும் விசுவாசிப்பது' என்ற இத்தொடரின் மூன்றாம் நாளில் நாம் இருக்கிறோம். இந்தத் தொடரைப் பற்றிய உங்கள் எண்ணங்களை அறிய விரும்புகிறோம். எங்களுக்கு எழுத தயங்காதீர்கள். எங்கள் குழுவில் உள்ள ஒருவர் உங்களுக்கு பதிலளிக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். 💌
“நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:6) என்ற வசனம் எவ்வளவு அழகாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தாலும், கடந்த சில வருடங்களாக, ஜாக்-இன் (Zac) கடினமான உடல்நலப் பிரச்சனைகளையும், அவன் தினசரி அனுபவித்த துன்பத்தையும் பார்த்தபோது, இந்த வசனத்தின்படி வாழ்வது நம்பமுடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஒருபுறம், விசுவாசத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க நாங்கள் தொடர்ந்து சவாலுக்கு உட்படுத்தப்பட்டோம். மறுபுறம், எங்களுக்கு முன்னால் வேதனையாக இருந்த உண்மை நிலையை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை.
விசுவாசம் என்பது உண்மையைப் புறக்கணிப்பது அல்ல; அது, நம் கண்களால் காணக்கூடியதை விட தேவனுடைய உண்மைத்தன்மை பெரியது என்று நம்புவதாகும்.
- நம் பார்வை தடைகளைக் காண்கிறது - விசுவாசம் வாய்ப்பைக் காண்கிறது.
- நம் பார்வை குறைகளைக் காண்கிறது - விசுவாசம் தெய்வீக ஏற்பாடுகளைக் காண்கிறது.
- நம் பார்வை வேதனையைக் காண்கிறது - விசுவாசம் நோக்கத்தைக் காண்கிறது.
விசுவாசத்தோடு நடப்பது என்றால், நாம் தேவனைப் பற்றி அறிந்த உண்மையை நம்புவதாகும்.
ஒருமுறை ஒரு போதகர், தனக்குத் தெளிவு கிடைக்க வேண்டும் என்று தனக்காக ஜெபிக்கச் சொல்லி அன்னை தெரசாவைக் கேட்டார். அன்னை தெரசா மென்மையாக மறுத்துவிட்டார். ஆச்சரியமடைந்த அவர், "ஏன்?" என்று கேட்டார். தனக்கு ஒருபோதும் தெளிவு கிடைத்ததில்லை என்று அவர் விளக்கினார். மேலும் குழப்பமடைந்த அவர், "ஆனால் உங்கள் வாழ்க்கை மிகவும் தெளிவாகவும் நோக்கம் நிறைந்ததாகவும் இருக்கிறது" என்றார். அதற்கு அன்னை தெரசா, "எனக்கு ஒருபோதும் தெளிவு கிடைத்ததில்லை, ஆனால் எனக்கு எப்போதும் இருந்த ஒன்று, நம்பிக்கை" என்று கூறினார்.
உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நிச்சயமற்றதாக உணரும் காலகட்டங்கள் இருக்கும். பதில்கள் வராது. குணமடைவது வெகு தொலைவில் இருக்கலாம். அற்புதம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள்: பார்ப்பதைக் கொண்டு நடக்க நாம் அழைக்கப்படவில்லை - நாம் யாரை அறிந்திருக்கிறோமோ, அவரைக் கொண்டு நடக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவருடைய பெயர் இயேசு கிறிஸ்து.
இன்று, நீங்கள் விளைவைக் காண முடியாவிட்டாலும், உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காதது போலத் தோன்றினாலும், உங்களைச் சுற்றி எதுவும் மாறாதது போலத் தோன்றினாலும், நீங்கள் விசுவாசத்தோடு வாழத் தேர்ந்தெடுப்பீர்களா?
நம்புவதற்கு காணக்கூடிய அடையாளங்களுக்காக காத்திருக்க வேண்டாம் - உங்கள் நம்பிக்கை உங்களை வழிநடத்தட்டும்.
