ஆழமான விசுவாசம்

'காணாதிருந்தும் விசுவாசிப்பது' என்ற தலைப்பில் நம் தொடரின் இறுதி நாள் இன்று, ஆனால் இந்த பயணம் இத்துடன் முடிவடையக் கூடாது என்பதே என் ஜெபம். இது நாம் சில நாட்களுக்கு தியானித்த ஒரு தலைப்பாக மட்டுமல்லாமல், நாம் தொடர்ந்தும் வாழும் ஒரு வாழ்க்கையாக இருக்க வேண்டும்—அதாவது, ஆழ்ந்த நம்பிக்கை, உறுதியான விசுவாசம், மற்றும் காணப்படாதவற்றில் அமைதியான உறுதியைக் கொண்ட ஒரு வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
நான் வேதாகமத்திலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்றைக் கூறி இதை முடிக்க விரும்புகிறேன்—என் சிறுவயது முதல் என் இதயத்திற்கு நெருக்கமான கதை அது. அது நோவாவின் கதை! (ஆதியாகமம் 6-9).
நான் குழந்தையாக இருந்தபோது, ஒரு பிரம்மாண்டமான படகில் விலங்குகள் நிரம்பியிருப்பதும், அது வெள்ளத்தில் மிதந்து பாதுகாப்பாக இருப்பதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நான் வளர்ந்த பிறகு, நோவாவின் கதை ஒரு இனிமையான குழந்தைக் கதை மட்டுமல்ல, அது விசுவாசம், கீழ்ப்படிதல், மற்றும் அறியாதவற்றின் மத்தியில் தைரியம் ஆகியவற்றின் ஒரு வல்லமை வாய்ந்த சாட்சி என்பதையும் நான் உணர்ந்தேன்.
நோவாவின் விசுவாசம் வெறும் நம்பிக்கை அல்ல—செயலுடன் கூடியது. அதுதான் இந்தக் கதையை மிகவும் ஆழமாக ஊக்குவிப்பதாக மாற்றுகிறது.
அவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும், நோவா ஒரு முட்டாளாகத் தோன்றியிருக்க வேண்டும். ஆனாலும் அவன் பார்த்ததைக் கொண்டு கட்டவில்லை—அவன் ஆண்டவரிடமிருந்து கேட்டதைக் கொண்டு கட்டினான்.
ராஜஸ்தானின் கொளுத்தும் வெயிலில் ஒரு பனி வீட்டை (igloo) கட்டும்படி ஆண்டவர் உங்களைக் கேட்டால் அல்லது பசுமையான, ஈரப்பதமாக கேரளாவில் ஒரு குளிர்கால உடை வணிகத்தைத் தொடங்குமாறு சொன்னால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
கேட்பதற்கே வேலைக்காகாததுபோல் இருக்கிறது, இல்லையா? நோவாவின் பணி அப்படிதான் இருந்திருக்க வேண்டும்.
எபிரேயர் 11:7 நமக்குச் சொல்கிறது,
“விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்….”.
நோவாவின் காலத்திற்கு முன், மழை பெய்ததே இல்லை, வெள்ளம் வருவது இருக்கட்டும் (ஆதியாகமம் 2:5-6). மழை என்றால் என்னவென்று நோவாவுக்குத் தெரியாதபோதிலும், அது வரும் என்று ஆண்டவர் அவனிடம் சொன்னபோது அவன் அவரை நம்பினான்.
நாமும் பெரும்பாலும் நம் வறண்ட காலத்தில் கட்டும்படி கேட்கப்படுகிறோம். நாம் மழையையோ, ஒரு திருப்புமுனையையோ, அல்லது உதவியையோ காணாமல் இருக்கலாம், ஆனால் விசுவாசத்துடன் தயாராகும்படி ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.
விசுவாசம் என்பது நாம் காணக்கூடிய ஆதாரத்தைப் பற்றியது அல்ல; அது எல்லாவற்றையும் பார்க்கக்கூடிய ஒருவரை நம்புவதைப் பற்றியது.
நீங்கள் இப்போது ஒரு “வறண்ட நிலம்” போன்ற பருவத்தில் இருக்கலாம், ஆனால் அது உங்கள் கீழ்ப்படிதலைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். அவருடைய சத்தத்தைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்களைக் ஆண்டவர் கனம்பண்ணுகிறார். எனவே தொடர்ந்து கட்டுங்கள்—தொடர்ந்து நம்புங்கள்.

