தவிர்க்க முடியாத திட்டு

குழந்தைப்பருவத்தில், எங்களிடம் நிறைய பணம் இல்லை. என் அப்பா ஒரு போதகர், நாங்கள் அன்பளிப்புகள் மூலம் வாழ்ந்தோம். எதிர்பாராத செலவுகள் எதுவும் ஏற்படாதபடி என் அம்மா எவ்வளவு கவனமாக எல்லாவற்றையும் கையாண்டார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
ஒரு துணி கிழிந்துவிட்டாலோ அல்லது தற்செயலாக ஒரு கண்ணாடி உடைந்து விட்டாலோ, கவனக்குறைவாக இருந்ததற்காக எங்களுக்கு நிச்சயம் திட்டு விழும். அது, நிச்சயமாக, நாங்கள் செய்த தவறுக்கு குற்ற உணர்வுடன் இருப்பதற்குக் காரணமாக அமைந்தது.
என் பெற்றோர்கள் தங்களிடம் இருந்த சொற்பமான பணத்துடன் எங்களை வளர்த்த விதத்திற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தவறுக்கும் தண்டனை என்ற எண்ணம், ஆண்டவருடனான எனது உறவிலும் நுழைந்தது என்பதை நான் உணர்ந்தேன். ஒரு தவறு செய்த பிறகு, பயம், தோல்வி மற்றும் குற்ற உணர்வு போன்ற அதே பயங்கரமான உணர்வுகள் மேலெழும்பும் – ஆண்டவர் என்மீது மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார் என்பதுபோல.
இதை நீங்கள் உணர்கிறீர்களா? உங்கள் பரலோகத் தந்தை, உங்கள் பெற்றோர் (முன்பு) உங்களிடம் நடந்து கொண்டது போலவே உங்களிடமும் நடந்துகொள்வார் என்று நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
ஆண்டவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது:
"அவர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்." – சங்கீதம் 86:15
இயேசு சிலுவையில் மரித்தபோது, உங்களின் எல்லாப் பாவங்களையும் சுமந்து, ஆண்டவரின் கோபத்தைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார். மேலும், நினைவில் கொள்ளுங்கள்:
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." – 1 யோவான் 1:9
இயேசு ஆண்டவரின் கோபத்தை தம்மேல் எடுத்துக்கொண்டார், அதனால் நீங்கள் அதைச் சுமக்க வேண்டியதில்லை!
"நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." – ரோமர் 5:9
தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வீகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை எப்போதும் இரக்கத்துடனும் கருணையுடனும் வரவேற்கிறார், அவமானம், பயம் அல்லது குற்ற உணர்வுடன் அல்ல!
நாம் ஜெபிப்போம்:
பரலோகத் தந்தையே, நீர் எப்போதும் என்னை திறந்த கரங்களுடன் ஏற்றுக்கொள்வதற்காக நன்றி, உம்முடைய கோபம், ஏமாற்றம் மற்றும் தண்டனை அனைத்தையும் இயேசுவின் மீது ஊற்றியதன் மூலம் உம்முடைய அன்பு, இரக்கம் மற்றும் கிருபையை நான் பெற்றுக்கொள்வதற்காக நன்றி. இயேசுவின் பெயரில், ஆமென்.

