நானும் இனிப்பு மீது எனக்குள்ள பிரியமும்

நேற்று, ஜெபம் எவ்வாறு நம்முடைய கவனத்தை நம்முடைய பிரச்சனைகளிலிருந்து, அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடியவரிடம் திருப்புகிறது என்பதைப் பற்றிப் பேசினோம். இன்று, ஜெபிக்கும்போது நிகழும் மற்றொரு மாற்றத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றம் நம்முடைய ஆசைகளில் நிகழ்கிறது.
எனக்கு இனிப்பு பண்டங்கள் மிகவும் பிடிக்கும் என்பதை நான் இதற்கு முன் கூறியிருக்கிறேன். கேக்குகள், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளிலிருந்து விலகி இருப்பது எனக்கு மிகவும் கடினம். ஆனால், ஆசைகளைக் கட்டுப்படுத்த சில வழிகளை நான் கண்டுபிடித்தேன்.
உதாரணமாக, பல் துலக்குவது அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது என் வாயில் உள்ள சுவையை மாற்றுகிறது. இதனால் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை திடீரென்று மறைந்துவிடுகிறது.
ஜெபமும் நம்முடைய "மன ஆசைகளில்" இதே போன்ற விளைவை ஏற்படுத்துகிறது. இதைத்தான் வேதாகமம் சோதனைகள் என்று கூறுகிறது. இந்த சோதனைகளுக்கு அடிபணிவதுதான் நாம் பாவம் என்று அழைக்கிறோம்.சோதனைகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் ஜெபத்தின் பங்கைப் பற்றி இயேசு வலியுறுத்தினார்:
"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்." - மாற்கு 14:38
இயேசு மலைப்பிரசங்கத்தின்போது கற்றுக்கொடுத்த ஜெபமான கர்த்தருடைய ஜெபத்தில்கூட, சோதனைகளிலிருந்து பாதுகாப்பிற்கான கோரிக்கையை அவர் சேர்த்துள்ளனர்:
"எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்…" - மத்தேயு 6:13
பேராசை, காமம், பொய் பேசுதல், பொறாமை, பெருமை, பெருந்தீனி, சுயநலம், சோம்பல், கோபம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், உங்கள் ஆசைகளுக்கு அடிபணிக்கும் நிலைக்கு நீங்கள் வரும்போது, ஒரு நிமிடம் நிறுத்தி ஜெபம் செய்யுங்கள்.
ஒரு சிறிய ஜெபம்கூட உங்கள் ஆசையைச் சோதனையிலிருந்து விலக்கி, உங்கள் பரலோகத் தகப்பனின் அன்பான, கிருபை நிறைந்த கரங்களை நோக்கித் திருப்ப உதவும்.
நான் என் நாளை ஜெபத்துடன் தொடங்கும்போது, நான் மிகவும் அன்பாகவும், இரக்கமாகவும், பெருந்தன்மையுடனும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எரிச்சலடைவது, கோபப்படுவது போன்ற குணங்கள் குறைகின்றன.ஜெபம் நம்முடைய சூழ்நிலைகளை மாற்றினாலும் சரி, மாற்றாவிட்டாலும் சரி, அது நம்மை உள்ளுக்குள்ள இருந்து மாற்றுகிறது.

