இது உங்களால் முடியாது!
'உங்களால் முடியும்' (You’ve got this?) என்ற பிரபலமான வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அது ஊக்கமளிப்பதோடு வலிமை சேர்ப்பதாகவும் உள்ளது. மேலும், நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்து, கூடுதல் முயற்சி செய்தால், கடினமான விஷயங்களைச் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது நமக்குக் கொடுக்கிறது. அநேக சமயங்களில் அது உண்மையும்தான்.
மகத்தான மற்றும் சவாலான காரியங்களைச் சாதிப்பதற்கான அபார ஆற்றலை ஆண்டவர் நமக்குக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். மனிதர்கள் தங்கள் மனதை ஒருமுகப்படுத்தினால் என்னென்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.
ஆயினும், சில நேரங்களில், நாம் சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில், அதாவது, நம்முடைய நிலைமைகள் மிகக் கடினமாக இருக்கும் சமயங்களில், 'நம்மால் முடியாது' என்ற நிலைமைக்குத் தள்ளப்படுகிறோம்.
நாம் ஏன் இத்தகைய சூழ்நிலைகளை சந்திக்கும்படி ஆண்டவர் அனுமதிக்கிறார்? இதுதான் இந்த வாரம் நம்முடைய “அதிசயங்களின்” மையக் கருத்தாகும்.
நல்ல செய்தி என்னவென்றால், நாம் நல்ல தோழமையில் இருக்கிறோம். 'உங்களால் முடியும்' என்ற ஒரு எளிய வார்த்தை போதுமானதாக இல்லாமல், சமாளிக்க முடியாத சூழ்நிலைகளில் இருந்த விசுவாச வீரர்களின் கதைகளால் வேதாகமம் நிரம்பியுள்ளது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம், 2 நாளாகமம் 20-இல் உள்ள யோசபாத் ராஜா ஆவார். எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் யூதாவின் மீது படையெடுத்து வந்த ஒரு பெரிய இராணுவத்தை அவர் எதிர்கொண்டார். தன் துயரத்தில் அவர் இவ்வாறு ஜெபித்தார்:
"...எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்." - 2 நாளாகமம் 20:12
எங்கள் மகன் ஜாக் (Zac) மருத்துவமனையில் இருந்தபோது, இந்தக் கூற்று நாங்கள் அதிகமாக ஜெபித்த ஜெபங்களில் ஒன்றாக மாறியது: "நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆனாலும் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது."
யகாசியேல்மூலம் கடவுள் யோசபாத்துக்குப் பதிலளித்தார்:
"இந்த ஏராளமான கூட்டத்தைக் குறித்துப் பயப்படவும் கலங்கவும் வேண்டாம்; இந்தப் போர் உங்களுடையதல்ல, தேவனுடையது." - 2 நாளாகமம் 20:15
அடுத்த நாள் காலையில், ஆண்டவர் பதுங்கியிருந்து தாக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்; எதிரே வந்த படைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட ஆரம்பித்தன. யோசபாத்தின் படைகள் போர்க்களத்தை அடைந்தபோது, எதிரிகள் அனைவரும் ஏற்கெனவே மடிந்து போயிருந்தனர். ஒருவர்கூடத் தப்பவில்லை. அவர்கள் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களை எடுத்துக்கொண்டு வருவது மட்டுமாகவே இருந்தது!
நம்மால் சமாளிக்க முடியாத அளவுக்குக் கடினமான சூழ்நிலைகளை கடவுள் அனுமதிப்பது, நம்முடைய பிரச்சனைகளை விட்டுவிட்டு, நம்முடைய கவனத்தை அவர்மென் நிலைநிறுத்தவே ஆகும்.
நீங்கள் உடனடி அழிவையும், முற்றிலும் வழியே இல்லாத ஒரு சூழ்நிலையையும் கண்டால், உங்கள் கண்களை ஆண்டவர்மேல் உயர்த்துங்கள்; ஏனெனில் இந்தப் போர் அவருடையது.
அவர் உங்களுக்காக இதைப் பார்த்துக்கொள்வார்!