நான் அதிகம் ஜெபித்த ஜெபம்
இந்த வருடம் நான் அதிகம் ஜெபித்த ஜெபம் சங்கீதம் 25:22ல் இருந்து எடுக்கப்பட்டது, இதுவே அந்த ஜெபம்: “மெண்டெஸ் குடும்பத்தை எங்களுடைய எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவியும்.”
இந்த வருடம் நிச்சயமாகத் துன்பங்கள் இல்லாமல் இருக்கவில்லை என்றாலும், மிகவும் தனித்துவமான மற்றும் எதிர்பாராத விதத்தில், எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்காக - எங்கள் மகன் ஜாக்குக்காக (Zac) ஆண்டவர் இந்தக் ஜெபத்திற்குப் பதிலளித்தார். ஏனென்றால், அவனுடைய மரணம் ஜெனிக்கும் எனக்கும் “துன்பங்கள்” என்ற பிரிவில் விழுந்தாலும், ஜாக் தானே அவனது மருத்துவ ரீதியான உடல் நிலை அவனுக்கு ஏற்படுத்திய இடைவிடாத மற்றும் கடுமையான துன்பங்கள் அனைத்திலிருந்தும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளான். அவன் இயேசுவுடன் இருக்கச் சென்றபோது அவனது எல்லா பூலோகத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டான்.
எனக்குப் பிடித்தமான ஒரு ஆங்கில தினசரி தியானப் புத்தகம் உள்ளது (The Bible in One Year by Nicky and Pippa Gumbel) - இதன் ஆசிரியர் இதில், சங்கீதம் 34:15-17க்கு அடுத்துள்ள தனது வேதாகம தாளின் ஓரங்களில் தனது துன்பங்களை எவ்வாறு எழுதி வைத்திருக்கிறார் என்பதை விவரிக்கிறார்:
“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது [...] நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடனர்.” சங்கீதம் 34:15-17
பின்பு ஒவ்வொரு வருடமும், வேதாகமத்தின் அந்தப் பகுதியை அவர் அடையும்போது, அவர் பல வருடங்களையும் அவற்றின் பலவிதமான துன்பங்களையும் திரும்பிப் பார்த்து, ஆண்டவர் அவரை விடுவித்த விதத்தைக் காண்கிறார். அது திரும்பவும் ஆண்டவரிடம் கூக்குரலிட அவரை ஊக்குவிக்கும் ஒன்றாக அமைகிறது.
இந்த இரண்டாம் நாள் சிந்தனைகளில், நீங்கள் உங்களையே இதைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: இந்த கடந்த ஆண்டில் நான் எதற்காக (அல்லது யாருக்காக) அடிக்கடி (அல்லது, மிக அவசரமாக) ஜெபித்தேன்?
நம்முடைய ஜெப வாழ்க்கை நமக்கு எது உண்மையாகவே முக்கியம் என்பதைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது. உங்களிடம் வாசித்துப் பார்க்க ஒரு ஜெப நாட்குறிப்பு இருக்கலாம், அல்லது பழைய குறிப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை நீங்கள் திரும்பிப் பார்க்கலாம். இந்த வருடம் நீங்கள் எதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள்?
அந்த ஜெபங்களுக்கு ஏதேனும் பதில்களைக் கண்டீர்களா? ஒருவேளை எதிர்பாராத வழிகளில் கூடவா?