உறவுகள் எப்போது கசப்பாகின்றன?
தற்போது என்னைச் சுற்றி மிகவும் அற்புதமான மனித சமூகத்தால் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன், ஆனால் எனக்கு எப்போதும் அப்படி இருந்ததில்லை. கடந்த காலத்தில், யாரை நம்புவது என்று தெரிந்துகொள்ள நான் போராடினேன், மேலும் சில உறவுகள் ஆரம்பத்தில் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், இறுதியில் என் வாழ்க்கையில் நன்மைக்கு பதிலாக அதிக தீங்கு விளைவிப்பதாக நான் கவனித்தேன்.
நம் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நபரின் தாக்கம் நல்லதா இல்லையா என்பதை ஆரம்பத்தில் அளவிடுவது சில சமயங்களில் கடினம். இருப்பினும், ஒரு வருடம் போன்ற நீண்ட காலப்பகுதியில் அந்த உறவின் விளைவுகளை நீங்கள் ஆராயும்போது, அதை அறிவது எளிதாகிவிடும்.
இன்று, நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வியை விட்டு செல்ல விரும்புகிறேன்: கடந்த ஆண்டு என் எண்ணம், உணர்வு அல்லது செயலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? அந்தத் தாக்கம் என்ன?
இந்தக் கேள்வியை நீங்கள் கிட்டத்தட்ட எவருக்கும் பயன்படுத்தலாம்: நண்பர்கள், சக ஊழியர்கள், அதிகாரிகள், போதகர்கள் மற்றும் நீங்கள் பழகும் நபருக்குக் கூட. அந்த உறவு உங்கள் வாழ்க்கையில் விளைவித்த 'கனிகள்' (விளைவுகள்) மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவை நல்லதா அல்லது கெட்டதா?
வேதாகமம் நமக்குக் கற்றுக்கொடுப்பது:
"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் [...] அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும். நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது." – மத்தேயு 7:16-18
உங்கள் நண்பருடன் பழகும் ஒவ்வொரு சந்திப்பும் புறம் பேசும் அமர்வில் முடிகிறதா? ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தை விட்டு குற்றவுணர்ச்சியுடனும் பயத்துடனும் மனமுடைந்து வெளியேறுகிறீர்களா? நீங்கள் விரும்பும் நபருடன் இருக்கும்போது நீங்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் உணர்கிறீர்களா?
ஒரு நபரைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், "அவர்களுடன் இருப்பது என்னை தேவனுக்கு நெருக்கமாக வளரச் செய்ததா அல்லது அவரிடமிருந்து என்னை மேலும் விலக்கி விட்டதா?"
மேலே உள்ள கேள்விகளுக்கான பதில்கள் பெரும்பாலும் எதிர்மறையாக இருந்தால், உறவை மாற்றியமைப்பது அல்லது முடித்துக்கொள்வதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. 🤔 ஏனென்றால், நினைவில் கொள்ளுங்கள்:
"ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்." – நீதிமொழிகள் 13:20
ஒரு நல்ல நண்பர் பின்வருவனவற்றைச் செய்வார்:
- நீங்கள் விழும்போது உங்களை தூக்கிவிடுகிறார் (பிரசங்கி 4:9-10).
- உங்களை ஊக்குவிப்பார் (1 தெசலோனிக்கேயர் 5:11).
- உங்களை கூர்மைப்படுத்துவார் (நீதிமொழிகள் 27:17).
- தீர்ப்பிடாமல் உங்களுக்கு செவிகொடுத்து, உங்களுக்காக ஜெபிப்பார் (யாக்கோபு 5:16).
- சந்தோஷத்திலும் துக்கத்திலும் உங்களுடன் இணைவார் (ரோமர் 12:15).
அன்பரே, இதைப் பற்றி சிந்திக்க உங்கள் நேரத்தை எடுத்து, உங்களுக்கு தேவையான உள்நோக்கை வழங்குமாறு பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள்.