நான் பிரச்சனையை உணர்கிறேன்!
நேற்றைய தினத்தில், மரியாள் தூதன் காபிரியேல் மூலம் தரிசிக்கப்பட்டபோது, அவள் தேவனுடைய குமாரனைப் பெற்றெடுக்கப் போகிறாள் என்று அவளுக்குச் சொல்லப்பட்டபோது, ஒரே நேரத்தில் மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் மிகவும் கலக்கமடைந்தவளாகவும் எப்படி இருந்தாள் என்பதை பற்றி, ஜெனி மிகவும் அழகாக விவரித்தார்.
நான் அந்தப் பகுதியில் இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க விரும்புகிறேன்.
ஜெனி விவரித்தது போல, மரியாளின் முதல் எதிர்வினை ஆச்சரியமாகவோ, பிரமிப்பாகவோ அல்லது கௌரவிக்கப்பட்டதாக உணர்வதாகவோ இல்லை. அவளது ஆரம்ப எதிர்வினை (நான் எனது சொந்த வார்த்தைகள்லில் சொல்கிறேன்), "ஏதோ பிரச்சினை வரப்போகிறது என்று நினைக்கிறேன்!" (லூக்கா 1:28-29) என்பதாக இருந்தது.
வேதாகமத்தில் மரியாளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களிலிருந்து, அவளும், அவளது வருங்கால கணவர் யோசேப்பும், ஒரு பக்தியுள்ள, மதப்பற்றுள்ள யூதர்கள் என்பதைக் நாம் அறியலாம்.
எனவே, தேவன் சில குறிப்பிட்ட பணிகளுக்காக அழைத்த மக்களைப் பற்றிய கதைகளை மரியாள் கேட்டிருப்பது மிகவும் சாத்தியம். உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைக் கூறலாம். அவர்களின் கதைகள் பெரும்பாலும் வீர தீரமானதாகவோ அல்லது கவர்ச்சியானதாகவோ இருப்பதில்லை. மாறாக, வேதாகமத்தில் மிக முக்கியமான ஒவ்வொரு நபரும் நம்ப முடியாத துன்பங்களைச் சந்தித்துள்ளனர்.
- எரேமியா மிகவும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதால், தான் பிறக்காமல் இருந்திருக்கலாம் என்று விரும்பினார் (எரேமியா 20:14-18).
- பின்னர் அவர் அடிக்கப்பட்டு நீண்ட காலம் ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் (எரேமியா 37:15-16).
- யோனா சீறிப்பாயும் கடலில் ஒரு புயலின் போது கப்பலிலிருந்து தூக்கி எறியப்பட்டார், அங்கு அவர் இறக்கும் தருவாயில் இருந்தார், ஆனால் ஒரு மீனால் விழுங்கப்பட்டு, அதன் உள்ளே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (யோனா 1).
- ஏசாயா 3 வருடங்கள் நிர்வாணமாக நடக்க வேண்டியிருந்தது (ஏசாயா 20:3).
- தானியேல் சிங்கக் குகையில் போடப்பட்டார் (தானியேல் 6:16).
ஒரு தூதன் அவளுக்கு ஒரு விசேஷ செய்தியுடன் தோன்றியபோது, மரியாள் ஏன் "மிகுந்த கலக்கமடைந்தாள்" என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
இன்றும், அவரது இராஜ்யத்தில் வலிமையுடன் பயன்படுத்தப்படும் பல பெரிய தேவ மனிதர்களையும் பெண்களையும் நான் அறிவேன். அவர்களில் எவருக்கும் கடினமான சூழ்நிலைகள் இல்லாத எளிதான வாழ்க்கை இருந்ததில்லை, மாறாக, அவர்களின் பெரிய அழைப்பின் காரணமாக அவர்கள் பெரும்பாலும் கூடுதல் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
என் சொந்த வாழ்க்கையில் கூட, நான் ஒரு பெரிய ஊழியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும், கஷ்டங்களில் இருந்து நான் விலக்கப்படவில்லை. மிக சமீபத்திய சோதனை, எங்கள் 5 வயது மகன் ஜாக் (Zac) மரணமடைந்ததாகும்.
இருப்பினும், மரியாளின் ஆரம்ப எதிர்வினையை விட, அவளது இறுதித் தீர்மானம் இன்னும் சுவாரஸ்யமானது:
“இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” – லூக்கா 1:38
இதுவே எப்போதும் என் மனப்பான்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த விலையைக் கொடுத்தாலும் நான் தேவனையே சேவிக்க விரும்புகிறேன். நீங்கள் எப்படி?