ஆண்டவர் உங்களைத் தண்டிக்கிறாரா?
நீங்கள் ஒரு அற்புதமான கிறிஸ்துமஸைக் கொண்டாடினீர்கள் என்று நம்புகிறேன்! நீங்கள் அதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவழித்தீர்களா?
கடந்த 3 வாரங்களாக, இயேசுவின் தாயான மரியாளின் பார்வையில் கிறிஸ்துமஸைப் பற்றி நாம் கவனம் செலுத்தினோம். ஆனால் கிறிஸ்துமஸ் கதையில் குறிப்பிடத் தகுந்த வேறு இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன: சகரியா மற்றும் எலிசபெத். இவர்களின் வரலாற்றை லூக்கா 1ல் நாம் படிக்கலாம்.
எலிசபெத் மற்றும் சகரியா ஆகியோர் ஆண்டவருக்குப் பயந்து, பரிசுத்தமும் குற்றமற்ற தன்மையும் கொண்ட தம்பதியர் என்று விவரிக்கப்படுகிறார்கள் (வசனம் 6). ஆனால் அப்படியிருந்தும், அவர்களுக்குப் பிள்ளை இல்லை, இப்போது அவர்கள் மிகவும் வயதானவர்களாகிவிட்டனர் (வசனம் 7).
லூக்கா 1:6-7 இவ்வாறு கூறுகிறது:
தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். [...] அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது.
இந்த வரியைப்பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நீதியுள்ளவர்கள், ஆனாலும் பிள்ளை இல்லாதவர்கள். குற்றமற்றவர்கள், ஆனால் அவர்களின் உன்னதமான விருப்பம் (வசனம் 13) அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
அவர்களின் பிள்ளையின்மை என்பது பரிசுத்தம் குறைவாக இருந்ததற்கான அல்லது பாவமான வாழ்க்கைக்கான தண்டனை அல்ல, அவர்களுடைய நீதியும் ஆசீர்வாதத்திற்கான உத்தரவாதம் அல்ல.
சில சமயங்களில், நாம் கிறிஸ்தவர்களாக இருக்கும்போது, வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி போகாதபோது, "ஆண்டவர் என்னைத் தண்டிக்கிறார்" என்று நாம் நினைப்பதுதான் நம் முதல் எதிர்வினையாக இருக்கிறது. அல்லது நம்முடைய நல்ல கிறிஸ்தவ நடத்தை அல்லது பரிசுத்த வாழ்க்கை முறை காரணமாக, சில ஆசீர்வாதங்கள் அல்லது தேவனுடைய தயவுக்கு நாம் உரிமை உடையவர்கள் என்று நம்முடைய சுய-நீதி நம்மை உணர வைக்கிறது.
சகரியா மற்றும் எலிசபெத்தின் கதை இந்த இரண்டு கருத்துக்களும் தவறு என்பதை நிரூபிக்கிறது.
எங்கள் மகன் ஜாக் நோய்வாய்ப்பட்டபோது, மதச்சார்பற்ற பாடல்களைப் பாடுவதை நிறுத்தும்படி ஆண்டவர் எங்களை எச்சரிப்பதாக சிலர் எங்களிடம் சொன்னார்கள் (அந்த நாட்களில், கேம்ரன் சில சமயங்களில் பாலிவுட் பாடல்களை பாடி அவற்றை ஆராதனைப் பாடல்களுடன் இணைப்பார்). இந்தக் கருத்துக்கள் முரட்டுத்தனமாகவும், இரக்கமே இல்லாததாகவும் இருந்தது மட்டுமல்லாமல், வெளிப்படையாக வேதாகமத்திற்கு முரணாகவும் இருந்தன!
"ஆண்டவர் இப்படிச் செயல்படுவதில்லை!" என்று அந்த மக்களிடம் சொல்ல வேண்டும் என்று என் உள்ளத்தில் இருந்த அனைத்தும் விரும்பின. அதற்குப் பதிலாக, ஆண்டவரின் உண்மையான சுபாவத்தையும், அவர்கள் மீதுள்ள அவருடைய நிபந்தனையற்ற அன்பையும் அவர்கள் அறிந்துகொள்ள ஒரு வெளிப்பாட்டைப் பெறும்படி நான் ஜெபித்தேன்.
நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் ஆசீர்வாதங்களும் கஷ்டங்களும் சமமாகவே வந்து சேரும் (மத்தேயு 5:45 மற்றும் யோவான் 16).
சகரியா மற்றும் எலிசபெத்தின் கதை, நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் வராத போதும் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவும், ஆண்டவருக்குச் சேவை செய்யவும் நமக்குக் கற்பிக்கிறது.
சகரியாவிடம் பேசிய காபிரியேல் தூதரின் வார்த்தைகளில் (லூக்கா 1:13), இன்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்:
பயப்படாதே,; உன் ஜெபம் கேட்கப்பட்டது.