முக்கியமான விஷயங்கள் முதலில்
நீங்கள் ஒன்பது நீண்ட மாதங்களாக ஊமையாக இருந்து, திடீரென்று மீண்டும் பேசும் திறன் பெற்றால், நீங்கள் முதலில் என்ன சொல்வீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?
இந்தச் சூழலில், இன்னொரு நிகழ்வையும் கவனியுங்கள்: உங்கள் குரல் திரும்ப வரும் அதே நேரத்தில் உங்கள் முதல் குழந்தை பிறந்துவிட்டது.
அத்தகைய தருணத்தில் என் வாயிலிருந்து நூற்றுக்கணக்கான விஷயங்கள் வெளிவர முடியும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது: மகிழ்ச்சி, வியப்பு, என் மனைவிக்கான உற்சாக வார்த்தைகள், மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான அன்பின் பொழிவுகள்.
“என்ன ஓர் அபத்தமான சூழ்நிலை!” என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் அது வேதாகமத்தில் உள்ள ஒரு ஆசாரியனாகிய சகரியாவுக்கு நடந்தது (லூக்கா1 ஐ வாசிக்கவும்).
ஓன்பது மாத மௌனத்திற்குப் பிறகு அவருடைய வாய் திறக்கப்பட்டபோது, அவருடைய முதல் வார்த்தைகள் இவையே:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும், [...] தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார் – லூக்கா 1:68-75
சகரியாவின் துதிப் பாடல் 11 வசனங்களுக்குத் தொடர்கிறது (லூக்கா 1:68-79). அவருக்கு எது முதன்மையானது என்பதில் சரியான புரிதல் இருந்தது என்று சொல்லலாம்; எல்லாவற்றிற்கும் மேலாக, துதியே அவருடைய உதடுகளைக் கடந்து வந்தது!
தேவனைத் துதிப்பது எப்போதும் நமது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வளவு ஊக்கமளிக்கும் நினைவுறுத்துதல்!
"மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, இவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது." – சங்கீதம் 100:2-5
இன்று நீங்கள் வேறு எதையும் செய்வதற்கு முன், ஒரு கணம் எடுத்து தேவனைத் துதியுங்கள்!