புறப்படுவதா அல்லது தங்கிவிடுவதா?
இயேசு பிறந்த பிறகு அவரைச் சந்திக்க வந்த ராஜாக்களின் (சாஸ்திரிகள்) கதையிலிருந்து தூண்டுதல் பெற்று, இந்த வாரம் முழுவதும் நாம் தேவனைத் தீவிரமாக தேடும் ஒரு பயணத்தில் இணைந்து சென்றுகொண்டிருக்கிறோம் (இந்தக் கதையை மத்தேயு 2:1-12ல் வாசிக்கலாம்).
நேற்று, அந்த ராஜாக்கள் நட்சத்திரங்களில் ஒரு அடையாளத்தை தீவிரமாக தேடிக் கொண்டிருந்ததைப் குறித்து பேசினோம். அவர்கள் இறுதியாக அதை பார்த்தபோது, அவர்களுக்கு ஒரு விருப்பத்தேர்வு இருந்தது. அவர்கள் கண்ட நட்சத்திரத்தை அசட்டை செய்துவிட்டு, தங்கள் வீடுகளின் சௌகரியத்திலும், பழகிய தேசங்களிலும் அப்படியே தங்கியிருந்திருக்க முடியும், ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக அந்த நட்சத்திரத்தை முழுவதுமாக பின்தொடர அவர்கள் முடிவு செய்தார்கள்.
யூதர்களுக்கு ராஜாவாக பிறந்தவரைத் தேடி (இயேசுவைத் தேடி) அவர்கள் மேற்கொள்ளும் அந்தப் பயணம் ஒரு பெரிய சாகசமாக அமைந்தது:
"கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்தரை கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்." – மத்தேயு 2:1-2
முதலாவதாக, அவர்கள் ஏரோது என்ற ஒரு பைத்தியக்காரத்தனமான, பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட மற்றும் அதிகாரப் பசி கொண்ட ராஜாவை சந்தித்தார்கள். தனக்கு அச்சுறுத்தலாக தெரிபவர்கள் யாரையும் ஏரோது கொல்லத் துணிந்தவன். அவனுடைய வன்முறைச் செயல்கள் மனித உயிர்கள் மீது அவனுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதைக் காட்டின (மத்தேயு 2:2-16).
இரண்டாவது, முதல் நாளில் நாம் பார்த்தபடி, ஜோதிடர்களாக இருந்த இவர்களின் தொழில், யூத சட்டத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. எனவே, இவர்கள் எங்கே சென்றார்களோ, அந்த நிலப்பரப்பில் இவர்களை சந்தேகத்துடனும் விரோதத்துடனும் நோக்கும் அபாயம் இருந்தது.
நான் முதன்முதலில் இந்தியா வந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. தேவன் என்னை அழைத்திருப்பதை நான் உணர்ந்தேன், ஆனாலும் அந்தப் பயணம் தடைகள் நிறைந்ததாகவே இருந்தது. என்னை அனைவரும் நேசித்து, கொண்டாடிய ஒரு ஊழியத்தை என் சொந்த நாட்டில் விட்டுவிட்டு, எனக்கு யாரையுமே தெரியாத, எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய ஒரு நாட்டிற்கு சேவை செய்ய நான் வந்தேன்.
சில நேரங்களில் தேவன் நமது சௌகரியமான எல்லைகளைத் தாண்டி நம்மை பயணம் செய்ய அழைக்கிறார். அது சவாலாகத் தோன்றினாலும், முற்றிலும் அவருடைய திட்டத்தின்படியே அமைகிறது. தேவனைத் தேடுவது என்பது அவருடைய வார்த்தைகளைப் பெறுவது மட்டுமல்ல, அவர் அழைக்கும்போது செயல்படுவதும் ஆகும்.அடையாளங்களைக் காண்பது ஒரு விஷயம்; ஆனால் அவற்றைப் பின்தொடர்வதற்கு எப்போதும் ஒரு விசுவாசமான அடி எடுத்துவைப்பது தேவைப்படுகிறது.
"தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்." – 2 கொரிந்தியர் 5:6
உங்கள் சௌகரியமான நிலையிலிருந்து வெளியே வருவதற்கு தேவன் உங்களை ஏதேனும் ஒரு விதத்தில் அழைக்கிறாரா?