சாப்பிடுவதற்குக்கூட நேரமில்லாத அளவுக்கு நான் வேலையில் மூழ்கியிருக்கும்போது...
நீங்கள் ஏதோ ஒரு வேலையில் மிகவும் மும்முரமாக இருக்கும்போது, சாப்பிடுவதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ அல்லது தண்ணீர் குடிப்பதற்கோ கூட மறந்துபோகும் சூழல் உங்களுக்கு எப்போதாவது நடந்ததுண்டா?
நான் பாடல்களை எழுதுவது மற்றும் தயாரிப்பது போன்ற வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டால், எனக்காக நேரம் அப்படியே நின்றுவிடும் என்பதும், நான் பல மணிநேரம் இடைவிடாமல் வேலை செய்வேன் என்பதும் ஜெனிக்கு தெரியும். அவள்தான் எனக்கு இடைவேளை எடுக்க நினைவூட்ட வேண்டும் அல்லது எனக்கு உணவை கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.
அதேபோலவே, நமக்கு என்ன தேவை என்பது நமக்கே தெரியாதபோது கூட, தேவன் அதை அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 23-யை எழுதும்போது, தாவீது தேவனை ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு இவ்விதமாக எழுதுகிறார்:
"அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தின்மித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்." – சங்கீதம் 23:2-3
இதில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா? மேய்ப்பன் இங்கே மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறார். வழிகாட்டுவது, நடத்துவது மற்றும் ஆத்துமாவைத் தேற்றுவது ஆகிய அனைத்தையும் அவர் செய்கிறார். ஆடுகள் செய்ய வேண்டியதெல்லாம் அவரைப் பின்தொடர்வது மட்டுமே. மேய்ப்பன் ஆடுகளை புல்வெளியில் படுத்துக்கொள்ளவும் வைக்கிறார்.
சில நேரங்களில், நமது கிறிஸ்தவ வாழ்க்கையில், நாம் செய்கிற காரியங்கள் போதுமானதாக இல்லை என்று தோன்றலாம். இன்னும் அதிகமாக ஊழியம் செய்ய வேண்டும், சுவிசேஷம் சொல்ல வேண்டும், பிறர் மேல் அன்பு செலுத்த வேண்டும், வேதம் வாசிக்க வேண்டும் அல்லது ஜெபிக்க வேண்டும் என்று நாம் ஓடிக்கொண்டே இருக்கலாம். ஆம், அவையெல்லாம் நல்ல காரியங்கள் தான், அவசியமானவை தான். ஆனால், தேவன் உங்களை ஓய்விற்குள் வழிநடத்த அனுமதிப்பதற்கு மட்டும் மறந்துவிடாதீர்கள்.
"நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிகப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்." – ஏசாயா 30:15
ஆடுகள் தங்களை முற்றிலும் பாதுகாப்பாக உணர்ந்தால் ஒழிய, அவை ஓய்வெடுக்கவோ அல்லது படுக்கவோ செய்யாது. இது தாவீதுக்கு நன்றாகத் தெரியும்; ஏனென்றால், அவர் ஒரு மேய்ப்பனாக இருந்தவர் (1 சாமுவேல் 17:34).
தேவன் உங்களை ஓய்வு, அமைதி மற்றும் நம்பிக்கை உள்ள ஒரு இடத்திற்கு வழிநடத்த விரும்புகிறார்—அவருடைய முன்னிலையில் நீங்கள் முற்றிலும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் உணரக்கூடிய இடம் அது.
அவரை நீங்கள் அனுமதிப்பீர்களா?