எது சிறந்தது: ஒரு சகோதரனா அல்லது ஒரு நண்பனா?
பெரும்பாலான மக்கள் குடும்பத்தையே இந்த உலகில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். நீங்கள் ஒரு நல்ல, அன்பான குடும்பத்தில் பிறந்திருந்தால், உங்களை ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுங்கள்! ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும்: நண்பர்களும் மிக முக்கியமானவர்கள்.
உங்கள் குடும்பத்தைப் போலவே நீங்கள் (கிட்டத்தட்ட) கருதும் அளவுக்கு நெருக்கமான நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா?
தாவீதுக்கு அப்படி ஒரு நண்பன் இருந்தார். சவுல் ராஜாவின் மகனாகிய யோனத்தான் தான் தாவீதின் சிறந்த நண்பன் (1 சாமுவேல் 18:1-4).
தாவீதின் கதையை வாசிக்கும்போது, அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் நல்ல உறவு இருந்ததா என்ற சந்தேகம் எழுகிறது. முதலாவதாக, ஒரு புதிய ராஜாவை அபிஷேகம் செய்ய சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதின் வீட்டிற்கு வந்தபோது, அவனுடைய தந்தை ஈசாய் தன் எல்லா மகன்களையும் சாமுவேல் முன் நிறுத்தினார், ஆனால் தாவீதை மட்டும் மறந்துவிட்டார். அவனுடைய சொந்தத் தந்தையே அவனை ராஜாவாக தகுதியுள்ளவனாக கருதவில்லை! (1 சாமுவேல் 16)
அதன்பிறகு, போர்க்களத்தில் இருந்த தன் சகோதரர்களுக்கு உணவு கொண்டு சென்றபோது, கோலியாத்தைப் பற்றி விசாரித்ததற்காக அவர்கள் அவனைக் கடிந்துகொண்டார்கள்:
“அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்." – 1 சாமுவேல் 17:28
ஆனால், தாவீதின் உடன் பிறந்த சகோதரர்களை விட யோனத்தான் ஒரு நல்ல சகோதரனாக இருந்தான். 1 சாமுவேல் 18:1-ல் சொல்லப்பட்டுள்ளது போல, யோனத்தானின் ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாய் இணைந்திருந்தது; அவன் தன்னை நேசிப்பதுபோல அவனை நேசித்தான்.
நாம் மீட்பையும் மறுவாழ்வையும் தருகிற தேவனை சேவிக்கிறோம். நாம் எதையாவது இழந்திருந்தால், அவர் எதிர்பாராத வழிகளில் அதை நமக்குத் திரும்ப தருகிறார். ஒரு குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டிய அன்பையும் அங்கீகாரத்தையும் தாவீது பெறாமல் இருந்திருக்கலாம், ஆனால் யோனத்தான் மூலமாக தேவன் அவனுக்கு தங்கத்தை விட மேலான ஒரு நண்பனைக் கொடுத்தார்.
நீங்கள் எதையாவது இழந்துவிட்டதாக உணருகிறீர்களா? இந்த வாக்குறுதி உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்:
"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக." – 1 பேதுரு 5:10