பொய் சொல்லுகிறாயா? இல்லை அப்பா!
எனது பணி எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனெனில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரைப் பற்றி ஒவ்வொரு நாளும் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது: அவர் தான் இயேசு.
அவருக்கே எல்லா மகிமையும் செலுத்துவதும், அவர் யார் என்பதையும் அவர் உங்களுக்காகச் செய்துள்ள அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவதுமே எப்போதும் எனது குறிக்கோளாக உள்ளது!
அதனால்தான், விவிலியம் பிசாசைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், வழக்கமாக அவனைப் பற்றி எழுதுவதை நான் தவிர்க்கிறேன்; அவன் நமது கவனத்தைப் பெறத் தகுதி அல்ல. ஆனால், அவனைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது:
“அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்திலிருந்து பேசுகிறான்.” – யோவான் 8:44
நாம் கிறிஸ்தவர்களாக இருந்தாலும்கூட, சில நேரங்களில் அறியாமலேயே சில பொய்கள் நம் மனதிற்குள் ஊடுருவுகின்றன.
"நான் போதுமானவன் அல்ல", "நான் ஒரு தோல்வியாளன்", அல்லது "நான் அன்பிற்குத் தகுதியற்றவன்" போன்ற எண்ணங்கள் தோன்றும்.
இந்த எண்ணங்கள் இறைவனிடமிருந்து வருவதல்ல, பொய்க்குப் பிதாவாகிய அவனிடமிருந்தே வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பொய்களைத் தூக்கியெறிந்துவிட்டு, உங்களைக் குறித்து இறைவன் சொல்லியிருக்கும் உண்மைகளை அவர் உங்களுக்கு நினைவூட்ட இடம் கொடுங்கள்.
உங்களுக்காக இறைவனின் உண்மைகள் இதோ, இவை உங்கள் சிந்தனையை வியப்பில் ஆழ்த்தட்டும் 🤯:நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் மற்றும் இறைவனின் பிள்ளை: "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; நாம் அப்படியே இருக்கிறோம்." – 1 யோவான் 3:1
நீங்கள் மன்னிக்கப்பட்டவர்: "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, அவரது இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது." – எபேசியர் 1:7
நீங்கள் ஒரு உன்னதமான படைப்பு: "ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்." — எபேசியர் 2:10
நீங்கள் அவரது சாயலில் படைக்கப்பட்டவர்: "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவச்சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." — ஆதியேகம் 1:27
இந்த உண்மைகளை நீங்கள் முழுமையாக நம்பும் வரை இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருங்கள்!