நமது உலகளாவிய குடும்பம் 🌏
ஒரு கிறிஸ்தவராக இருப்பதில் நான் மிகவும் நேசிக்கும் விஷயங்களில் ஒன்று, உலகளாவிய ரீதியில் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளாக ஒரு சமூகத்தின் அங்கமாக இருப்பதுதான். ஒரே நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்காகவே, தங்களை ஒரு குடும்பமாகக் கருதும் இத்தகைய ஒரு உறவு முறை வேறு எந்த மதத்திலோ, வாழ்க்கை முறையிலோ அல்லது தத்துவத்திலோ காண முடியாத ஒன்றாகும்.
விசுவாசிகளின் சமூகம் என்ற முறையில் நாம் செய்யக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த காரியங்களில் ஒன்று, இணைந்து ஜெபிப்பதாகும். இயேசு இவ் வழியாக வாக்குறுதி அளித்துள்ளார்:
“ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.” – மத்தேயு 18:20
கூட்டு ஜெபத்திற்கு ஒரு சிறந்த உதாரணத்தை அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்தில் காணலாம். அங்கு சிறையிலடைக்கப்பட்டு, கொலை செய்யப்படவிருந்த பேதுருவுக்காக, யோவானின் தாயாகிய மரியாளினுடைய வீட்டில் ஒரு பெரும் கூட்டத்தினர் கூடி ஜெபித்துக் கொண்டிருந்தனர் (அப்போஸ்தலர் 12:12).
இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், நண்பர்கள் தன் உயிருக்காக ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில், பேதுருவோ அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் (அப்போஸ்தலர் 12:6-7). நண்பர்களின் ஜெபத்தினால் தாங்கப்பட்ட நிலையில் பேதுரு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தச் சித்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எங்களது மகன் ஜாக் (Zac) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, என் மனைவியும் நானும் இதே போன்ற ஒரு ஜெபப் பாதுகாப்பை அனுபவித்தோம். நாங்கள் ஜாக்கை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் எங்களுக்காக ஜெபித்து எங்களைத் தாங்கிக் கொண்டிருந்தனர்.
மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தங்களின் மற்றொரு நண்பரான யாக்கோபு அண்மையில்தான் கொலை செய்யப்பட்டிருந்தார்; இருப்பினும் அந்த விசுவாசிகள் தொடர்ந்து ஜெபித்தனர். நிச்சயமாக அவர்கள் யாக்கோபுக்காகவும் ஜெபித்திருப்பார்கள். இருப்பினும், அந்தச் சூழ்நிலையில் தேவன் தலையிடவில்லை. ஆனால், அது அவர்களை மீண்டும் ஜெபிப்பதிலிருந்து தடுத்துவிடவில்லை.
உங்கள் வாழ்க்கையிலும் பதில் கிடைக்காத ஜெபங்கள் ஏதேனும் உள்ளனவா? ஒருவேளை அத்தகைய ஜெபங்களை மீண்டும் ஏறெடுக்க நீங்கள் சோர்வடைந்திருக்கலாம். ஆனால், ஜெபிப்பதை நிறுத்தாமல் உங்கள் விண்ணப்பங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஆண்டவரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக இந்தச் செய்தியை எடுத்துக்கொள்ளுங்கள்.