நான் உங்களுக்குச் செய்ததை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?
இதுவரை ஒருவர் உங்களுக்காகச் செய்ததிலேயே மிகச் சிறந்த காரியம் எது?
இந்தக் கேள்வி மற்றவர்கள் உங்களுக்காக செய்த சிறந்த செயல்கள் மற்றும் அற்புதமான ஆச்சரியங்கள் குறித்த பல நினைவுகளை உங்களுக்குக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால், அவை அனைத்திலும் முதன்மையானது இயேசு உங்களுக்காகச் செய்த காரியம்தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!
"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போட்டோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." – ஏசாயா 53:5-6
யோவான் 13:12-ல் இயேசு தமது சீடர்களிடம்: "நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?" என்று கேட்பதை நாம் வாசிக்கிறோம். அவர்களின் பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரிப்பதற்கு முன்பாக, இரவு உணவின் போது அவர்களுடைய பாதங்களைக் கழுவிய உடனேயே அவர் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
அவர்களுடைய ரபியாகிய அவரே அவர்களின் பாதங்களைக் கழுவியது, ஒரு மாபெரும் தாழ்மையின் அடையாளம். அவர்களுக்கு ஒன்றை போதிக்க விரும்பியதால்தான் அவர் அதைச் செய்துவிட்டு இந்தக் கேள்வியைக் கேட்டார்:
"ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களை கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." – யோவான் 13:14-15
இயேசு நமக்குச் செய்தது போலவே நாமும் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை அறிந்து, அவர் சீடர்களிடம் கேட்ட அதே கேள்வியை உங்களிடமும் கேட்க இடம் கொடுங்கள்: நான் உனக்குச் செய்ததை அறிந்திருக்கிறாயா?
"அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்." – 1 யோவான் 3:16
மற்றவர்களுக்காக உங்கள் உயிரைக் கொடுப்பது என்பது சிறிய, நடைமுறையான செயல்களிலிருந்தே தொடங்குகிறது (1 யோவான் 3:17-18).
இன்று நீங்கள் மற்றவர்களுக்கு அன்பைக் காட்டக்கூடிய வழிகள் ஏதேனும் உண்டா? தேவையிலுள்ள ஒரு நண்பருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவது போன்ற ஒரு எளிய செயலாகக் கூட இது இருக்கலாம். அல்லது ஒருவேளை அதைவிடப் பெரிய ஒன்றா? அதற்கு உங்கள் நேரம் அல்லது பணம் போன்ற ஏதேனும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கலாம், ஆனால் இயேசு உங்களுக்காக இதிலும் மேலானதைச் செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.