நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
யாரிடமாவது "நீங்கள் யார்?" என்று கேட்டால், "நான் ஒரு வாரிசு!" என்று யாரும் பதிலளிக்க மாட்டார்கள். 🤨
இருந்தபோதிலும், தேவனுடைய வாரிசாக இருப்பது என்பது கிறிஸ்துவுக்குள் நமது அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். கிறிஸ்து எவ்வாறு அந்த பரலோக ராஜ்யத்திற்கு வாரிசாக இருக்கிறாரோ, அவ்வாறே நாமும் இருக்கிறோம்.
"நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." – ரோமர் 8:17
ஒரு வாரிசு என்பவர் மற்றவருடைய சொத்து அல்லது அதிகாரத்திற்கு உரிமை பெற்ற நபர் ஆவார்; பெற்றோரிடமிருந்து நிலம், வீடுவாசல்களைப் பெறும் பிள்ளைகளை போன்றது இது.
வாரிசாக இருப்பது என்பது உங்களுக்கு ஒரு சுதந்தரம் கிடைக்கும் என்பதாகும்; கிறிஸ்துவுக்குள் வாரிசுகளாக இருக்கும் நமக்கும் இதுவே உண்மையாகும்.
"தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்." – எபேசியர் 1:12
தேவனுடைய பிள்ளைகளாக நமது சுதந்தரம் என்பது, முதலாவதாக நாம் தேவனையே பெற்றுக்கொள்வதுதான். அவரை அறிந்துகொள்வதற்கும், அவராலே நேசிக்கப்படுவதற்கும், அவரோடு உறவாடுவதற்கும் நமக்கு உரிமை கிடைக்கிறது; மேலும் நமக்கு உதவுவதற்காக அவர் தமது சொந்த ஆவியையே நம் இருதயங்களில் தந்தருளுகிறார் (யோவான் 14:26).
இரண்டாவதாக, நித்திய ஜீவன் என்னும் பரிசை நாம் பெறுகிறோம் (யோவான் 5:24). வலி, மரணம், துக்கம் அல்லது அழுகை இல்லாத ஓரிடத்தில் தேவனுடன் செலவிடும் நித்திய வாழ்வை நாம் சுதந்தரிக்கிறோம் (வெளிப்படுத்துதல் 21:4).
மூன்றாவதாக, நாம் இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தி, எதையும் ஜெபத்தில் அவருடைய நாமத்தினால் கேட்க முடியும்.
"நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்." – யோவான் 14:13
இறுதியாக, இறைவனுடைய பிள்ளைகளாகவும் வாரிசுகளாகவும், அவருடைய மிக முக்கியமான பணியில் பங்கேற்பதன் மூலம் அவருடைய வரலாற்றை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்: அதுவே இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்தல் ஆகும்.
நற்செய்தியைப் பகிர்வதன் மூலமும், சீடர்களை உருவாக்குவதன் மூலமும் இன்னும் அதிகமான வாரிசுகளை நாம் இந்தக் குடும்பத்திற்குள் வரவேற்க முடிகிறது (மாற்கு 16:15). இந்தச் சுதந்தரத்தின் ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால், இது ஒருபோதும் தீர்ந்து போகாது; இது அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறது!