நாம் படைக்கப்பட்டது….?
ஓர் ஆராதனைப் பயிற்சி அமர்வை (Worship Workshop) தொடங்குவதற்கு எனக்கு மிகவும் பிடித்தமான வழி இது:
“நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம்……??” என்று கேட்பது.
அதற்கு அங்குக் கூடியிருப்பவர்கள் வழக்கமாக, “ஆராதிப்பதற்காக!” என்று சத்தமிடுவார்கள்.
“தவறு!” என்று நான் பதிலளிப்பேன். எபேசியர் 2:10 இவ்வாறு கூறுகிறது:
"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."
ஆராதனையை ஒரு வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பது ஏன் இவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி நான் விவரிப்பதற்கு முன், இந்த வசனம் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கிறது.
ஆனால், நான் இவ்வாறு தொடங்குவதற்குக் காரணம், தேவன் நம்மை எதற்காகப் படைத்தாரோ, அந்த நற்கிரியைகள் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்காகவே ஆகும்.
இவ்வுலகில் நமது ஒரே நோக்கம் ஆராதிப்பது மட்டுமாக இருந்தால், நம்மை நேரடியாகப் பரலோகத்திற்கே அழைத்துச் செல்வதுதான் தேவனுக்குப் பொருத்தமானதாக இருந்திருக்கும்; ஏனெனில் அங்கே எந்தவித கவனச்சிதறலும் இன்றி முழுமனதோடு நாம் அவரை ஆராதிக்க முடியும்.
ஆனால், நாம் பரலோகத்தைப் போன்ற ஒரு கிறிஸ்தவக் குமிழிக்குள் வாழ்ந்து, தேவனை மட்டும் கவனித்து, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மறந்துவிடுவதற்காகப் படைக்கப்படவில்லை. நாம் இங்கே இருக்கும்போது நற்கிரியைகளைச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம்.
"எந்தக் கிரியைகள்?" என்று நீங்கள் கேட்கலாம். அதற்கானப் பதிலை இயேசு யோவான் 14:12-ல் அளிக்கிறார் :
"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்."
இயேசு செய்த கிரியைகளுக்குச் சில உதாரணங்கள் இங்கே:
- நோயாளிகளைக் குணப்படுத்தினார் (மத்தேயு 4:23).
- பிசாசுகளைத் துரத்தினார் (மத்தேயு 8:16).
- பசியுள்ளவர்களுக்கு உணவளித்தார் (மத்தேயு 15:32-37).
- ஏழைகளுக்கு ஊழியஞ்செய்தார் (லூக்கா 4:18).
- நற்செய்தியைப் பிரசங்கித்தார் (மத்தேயு 4:23).
- வேதத்தைப் போதித்தார் (மத்தேயு 4:23).
- சீடர்களை உருவாக்கினார் (மத்தேயு 4:18-20).
நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று உங்களை அழைத்துக் கொள்வதற்கு இது ஒரு தகுதிப் பட்டியல் அல்ல; மாறாக, இவ்வுலகில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பதற்கான அழகான வாக்குறுதி இது. இயேசு கொண்டிருந்த அதே நோக்கம் உங்களுக்கும் உண்டு.