தயவு செய்து, இப்போது வேண்டாம்!
நான் ஒரு ஆராதனை வழிநடத்துபவராக இருப்பதினால், மக்கள் பெரும்பாலும் ஒரு ஆராதனைக் கூட்டத்திற்குப் பிறகு புகைப்படம் எடுக்கவோ, கையெழுத்து வாங்கவோ அல்லது என்னுடன் கைகுலுக்கி நன்றி சொல்லவோ என்னைச் சந்திக்க விரும்புகிறார்கள்.
அதிர்ஷ்டவசமாக, நான் ஒரு வெளிப்படையான குணமுடையவன் (extrovert); நான் மக்களை நேசிப்பவன், கூட்டங்கள் எனக்கு ஆற்றலைத் தருகின்றன. இருப்பினும், ஆராதனை நடத்துபவர் என்ற எனது பணியை நிறைவேற்ற முடியாத அளவுக்கு நான் மிகவும் சோர்வாக இருக்கும் தருணங்களும் உண்டு அப்போது நான் மக்களிடம், "மன்னிக்கவும், இப்போது வேண்டாம்," என்று சொல்ல வேண்டியிருக்கும்.
இயேசு காயப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் தாங்க முடியாத வலியால் இறந்து கொண்டிருந்தபோது, அவருக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரண்டு குற்றவாளிகள் பேசத் தொடங்குகிறார்கள். முதலாவது நபர் இயேசுவை ஏளனம் செய்து, "நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்" (லூக்கா 23:39) என்கிறான். ஆம், இயேசு உண்மையில் கிறிஸ்துதான் (அதற்கு ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ என்று பொருள்), குறைந்தபட்சம் அவன் அந்தப் பகுதியை சரியாகச் சொன்னான்!
ஆனால் இன்னொரு குற்றவாளி அதிக மரியாதை காட்டி, இயேசுவின் ராஜ்யத்தில் வரும்போது அவனை நினைத்தருளும்படி அவரிடம் கேட்கிறான் (லூக்கா 23:42).
நான் இயேசுவின் இடத்தில் இருந்திருந்தால் (நான் இல்லாதது நல்லதே!), அந்தத் தருணத்தில் நான் ஒரு இரட்சகராக உணர்ந்திருக்க மாட்டேன். ஒரு இரட்சகராக இருப்பதற்கு பதிலாக நான் செய்யவேண்டிய அல்லது யோசிக்கவேண்டிய வேறு சில விஷயங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்திருக்கும்.
ஆனால் இயேசு அப்படி நினைக்கவில்லை, ஏனென்றால் அவர் கிறிஸ்து. இது அவர் நிறைவேற்றும் ஒரு தலைமைத்துவப் பொறுப்போ அல்லது அவர் ஏற்றுக்கொண்ட ஒரு கடமையோ அல்ல, இதுவே அவர். அவர் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட இரட்சகர்.
அவருடைய இருண்ட நேரத்திலும்கூட, இரட்சிக்கப்பட விரும்பும் ஒருவரை இரட்சிப்பதிலிருந்து எதனாலும் அவரைத் தடுக்க முடியவில்லை, அவர் அவனிடம் கூறுகிறார்:
“இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” – லூக்கா 23:43
"தயவுசெய்து, இப்போது வேண்டாம்," என்று இயேசு சொல்வதற்கு மிகவும் நியாயமான ஒரு நேரம் இருந்ததென்றால், அது அவர் சிலுவையில் மரித்துக்கொண்டிருந்தபோதுதான்.
ஆனால் சிலுவையில் இருந்தபோது ஒரு பாவியைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு இயேசு காயப்பட்டவராகவோ, சோர்வடைந்தவராகவோ அல்லது உடைந்தவராகவோ இருக்கவில்லை என்றால், அவர் உங்களுக்கு செவிசாய்க்காமல் இருப்பதற்கு ஒருபோதும் எந்த காரணமும் இருக்காது.
இன்று உங்கள் இரட்சகரிடம் பேசுங்கள், அவர் உங்களுக்காக எப்போதும் தயாராக இருக்கிறார்!