கடைசி நேரத்தில் தப்பித்தேன்!
‘மணி அடித்ததால் காப்பாற்றப்பட்டவர்’ (saved by the bell) என்ற சொற்றொடரை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உயிருடன் இருப்பவர் எவராவது தவறுதலாக அடக்கம் செய்யப்பட்டால், அவர் மூச்சுத்திணறி இறப்பதற்கு முன் குழியிலிருந்து வெளியே வர ஒரு சிறிய மணியை கல்லறையில் பொருத்தியிருந்த காலத்திலிருந்து இது உருவானது.
இக்காலத்தில், கடைசி நிமிடத்தில் தப்பிப்பதைக் குறிக்க இதைப் பயன்படுத்துகிறோம். அந்த வகையில், ‘மணியால் காப்பாற்றப்பட்டவர்’ என்பது இயேசுவுக்கு அருகில் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிக்குக் கண்டிப்பாகப் பொருந்தும்; இங்கே இயேசுவே அந்த "மணி"யாக இருந்தார்.
“நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” – லூக்கா 23:40-43
இது எனக்கு இரண்டு விஷயங்களை நினைவூட்டுகிறது:
-
மக்கள் மிகவும் தவிப்பில் இருக்கும்போது எதையும் ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். அந்த மனிதன் எதையும் இழப்பதற்கில்லை, தனது பாவ இயல்பை முழுமையாக உணர்ந்து, கடைசி புகலிடமாக இயேசுவிடம் வேண்டினான்.
-
சில நேரங்களில் மக்கள் தங்களுக்கு இரட்சிப்பு எவ்வளவு தேவை என்பதை உணர்வதற்கு, அவர்கள் வாழ்க்கையின் கடைசி நிலையை அடைய வேண்டியிருக்கிறது.
நல்ல கல்வி கற்று, வணிகம் அல்லது பொழுதுபோக்குத் துறையில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்த பலரின் வல்லமையான சாட்சிகளை நான் கேட்டிருக்கிறேன்; ஆனால் அவர்கள் வாழ்க்கை சிதைந்த பின்னரே, நற்செய்தியையும் தேவனுடைய இரட்சிப்பின் கிருபையையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறினார்கள்.
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நாம் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சந்திக்கும் ஒரு நண்பர், சக ஊழியர், குடும்ப உறுப்பினர் அல்லது முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவர் கூட போராட்டத்தின் நடுவில் இருக்கலாம். அவர்கள் நற்செய்தியைக் கேட்க பசியோடு இருக்கலாம்!
இருப்பினும், நம்மால் யாரையும் இரட்சிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்வது நல்லது; இயேசு மட்டுமே அதைச் செய்ய முடியும், மேலும் இரட்சிக்கப்பட விரும்பும் எவரையும் அவர் இரட்சிப்பார். அங்கிருந்த இரண்டு குற்றவாளிகளும் தவிப்போடு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர், ஆனால் ஒருவர் மட்டுமே இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தார்; மற்றொருவர் பெருமையுடன் பதிலளித்தார்.
நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் கனிவுடன் இருப்பதும், அவர்களின் இதயங்களில் விசுவாச விதைகளை விதைப்பதுமே நம்முடைய வேலை. தேவன் மீதமுள்ளவற்றைச் செய்வார்!