ஏப்ரல் ஏமாளிகள்!
இன்று நீங்கள் ஏதேனும் ஏப்ரில் ஏமாளி கேலிகளைச் செய்தீர்களா?
நான் சிறுவனாக இருந்தபோது, என் அப்பா எனது உடன்பிறந்தவர்களிடமும் என்னிடமும் ஒரு வேடிக்கை விளையாட்டை விளையாட விரும்புவார்; அவர் கையில் இரண்டு கோப்பைகளுடன் அறைக்குள் நுழைந்து, “யாருக்கு லஸ்ஸி (இனிப்பு சேர்த்துக் கடையப்பட்ட தயிர்) வேண்டும்?” என்று கேட்பார். நாங்கள் அனைவரும் “எனக்கு! எனக்கு!” என்று கத்துவோம். பிறகு அவர் எங்களிடம் அந்த கோப்பையைக் கொடுப்பார், ஆனால் அது லஸ்ஸிக்கு பதிலாக மோர் நிறைந்ததாக இருக்கும். 😖
நீங்கள் இனிப்பைச் சுவைக்க எதிர்பார்க்கும்போது, புளிப்பான ஒன்று பரிமாறப்பட்டால் அது ஒரு மாதிரியாக இருக்கும்!
இயேசு சிலுவையில் இருந்தபோது, அவர் இறப்பதற்குச் சற்று முன்பு, “தாகமாயிருக்கிறேன்” என்றார்; ஆனால் அவருக்குத் தண்ணீரைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு கடற்காளானைக் காடியில் நனைத்து அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள் (மாற்கு 15:36). ஐயோ!
இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காகவே இயேசு இதைச் சொன்னார் (யோவான் 19:28) :
"என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்." – சங்கீதம் 69:21
இயேசு அன்று நிறைவேற்றிய தீர்க்கதரிசனம் இது ஒன்றுமட்டும் அல்ல. அறிஞர்களின் கூற்றுப்படி, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று, அவர் பழைய ஏற்பாட்டின் 28 தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். இவற்றில் சில 800 ஆண்டுகளுக்கும் மேலானவை!
ஒரு மனிதர் ஒரே நாளில் நூற்றாண்டுகள் பழமையான 28 தீர்க்கதரிசனங்களையும், தனது வாழ்நாளில் நூற்றுக்கணக்கான பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு எவ்வளவு? அது கிட்டத்தட்ட பூஜ்ஜியமே!
இயேசுவின் மரணம் ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. அது நமக்கு மீட்பைக் கொண்டு வந்ததால் நமக்குச் சாதகமாக அமைந்த ஒரு "மகிழ்ச்சியான விபத்து" அல்ல. இல்லை, நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் வாயிலாக உருவாக்கப்பட்ட தேவனுடைய அழகான மற்றும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே அது இருந்தது (2 கொரிந்தியர் 5:18).
தேவனுடைய அசாதாரணமான வழிகளுக்காக இன்று அவருக்கு நன்றி சொல்ல ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். அவர் யுகங்கள் முழுவதும் மாறாதவர் என்பதற்காகவும், அவர் நம்மை தற்செயலாக அல்ல, மனிதன் அறிந்ததிலேயே மிகச் சிறந்த திட்டத்தின் மூலம் இரட்சித்தார் என்பதற்காகவும் நன்றி கூறுங்கள்.