எதிர்பாராத நேரத்தில் இயேசு தோன்றும் பொழுது
உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, எந்தத் தருணங்களில் இயேசு உங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள்?
எனக்கு, வேடிக்கை என்னவென்றால், அந்தத் தருணங்கள் சபை கூட்டங்களிலோ, எழுப்புதல் கூட்டங்களிலோ அல்லது ஆராதனை நிகழ்ச்சிகளிலோ அமையவில்லை. அவைப் பெரும்பாலும் எதிர்பாராதவையாகவே இருந்திருக்கின்றன, ஆனால் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை; உதாரணமாக ஒரு அமைதியான நடைப்பயணத்தின் போதோ அல்லது ஐ.சி.யு-வில் (ICU) என் மகனின் படுக்கையருகே அமர்ந்திருந்தபோதோ அவை அமைந்தன.
என்னைத் தவறாக எண்ண வேண்டாம், நான் சபைக்கு செல்வதை நேசிக்கிறேன், பெரிய ஆராதனை கூட்டங்களையும் முழுமனதாக ஆதரிக்கிறேன், ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்க அவை ஒரு நிபந்தனை அல்ல.
எம்மாவு செல்லும் வழியில் அந்த இரண்டு சீஷர்களுக்கு நடந்த கதையில் எனக்குப் பிடித்த விஷயமும் இதுதான். அவர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது, இயேசு அங்கே தோன்றி அவர்களுடன் நடக்கிறார். அவர் இயல்பாக அவர்களிடம், “நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.” (லூக்கா 24:17)
அங்கே மேடையில் இசைக்குழு எதுவும் இல்லை, அவர்கள் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை அல்லது தேவனை நோக்கிக் கூப்பிடவில்லை. அவர்கள் உபவாசம் இருக்கவில்லை, வேதவசனங்களைத் தியானிக்கவில்லை அல்லது தனிப்பட்ட ஜெபத்தில் இருக்கவில்லை; அவர் அங்கே தோன்றியபோது அவர்கள் வெறும் நடந்து கொண்டும் பேசிக் கொண்டும்தான் இருந்தார்கள்.
இயேசு அந்த உரையாடலில் இணையும்போது, அவர்களுக்குப் பிரசங்கம் செய்யவோ அல்லது அவர்களின் விவாதத்தைக் கண்டிக்கவோ இல்லை; ஒரு கேள்வியைக் கேட்பதன் மூலம் அவர் அந்த உரையாடலில் இணைகிறார். நடந்த "காரியங்களைப்" பற்றி அவர்கள் பேசத் தொடங்கும்போது, அவர் தனக்குத் தெரியாதது போலக் காட்டி, "எவைகள்?" (லூக்கா 24:19) என்று கேட்கிறார்.
அவர் அங்கேயே உயிர்த்தெழுந்த மேசியாவாகத் தன்னை வெளிப்படுத்தி, நேரத்தை மிச்சப்படுத்தி அவர்களின் குழப்பம் அனைத்தையும் நீக்கியிருக்க முடியும்; ஆனால் அதற்குப் பதிலாக, சீஷர்கள் தங்கள் உணர்வுகளுடன் போராடவும், நடந்த அனைத்தையும் புரிந்துகொள்ளவும் அனுமதித்து, அவர்களுடன் கூடவே வந்தார். இதை நினைக்கும்போது இயேசுவின் மீதுள்ள அன்பு எனக்கும் இன்னும் கூடுகிறது, அவர் எவ்வளவு தனிப்பட்ட அக்கறை கொண்டவர்!
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் சில காரியங்கள் இருக்கிறதா? சமீபத்திய நிகழ்வுகளா? எதிர்பாராத ஏமாற்றமா? அவற்றைப் பற்றி இயேசுவிடம் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் இதயத்தைத் திறந்தபடி அவரிடம் ஊற்றிக்கொண்டே ஒரு நடைப்பயணம் கூட மேற்கொள்ளலாம். அவர் ஒரு தொடர் கேள்வியைக் கேட்டு உங்களை ஆச்சரியப்படுத்தவும் கூடும்.😉