உங்களைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் விவரியுங்கள்
உங்களை இரண்டே இரண்டு விஷயங்களைக் கொண்டு வரையறுக்க வேண்டுமென்றால், அவைகள் என்னவாக இருக்கும்?
அதில் உங்கள் பிறந்த நாட்டை உட்படுத்துவீர்களா? உங்கள் தொழிலையா? உங்கள் மிகப்பெரிய சாதனையையா? உங்கள் மதத்தையா? அல்லது உங்கள் கலாச்சாரப் பின்னணியையா?
நீ்கள் யார் என்பதை அர்த்தமுள்ள விதத்தில் விவரிக்க வெறும் இரண்டு விஷயங்கள் மட்டும் போதாது என்றுதான் தோன்றுகிறது.
இருப்பினும், லூக்கா 19-ல் சகேயுவின் கதையை லூக்கா எழுதியபோது, அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தகுதியானவை என்று அவர் கருதியது போல் தெரிகிறது:
“அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்” - லூக்கா 19:1-2
சகேயு ஆயக்காரருக்குத் தலைவனாகவும் ஐசுவரியவானாகவும் இருந்தான். லூக்கா, சகேயுவைப் பற்றி விவரிக்க பொருத்தமானதாகக் கருதியது அவ்வளவுதான் என்று தெரிகிறது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
ஒரு வரி வசூலிப்பவராக (ஆயக்காரர்) இருப்பது என்பது அதிக ஊதியம் தரும் வேலை என்று சொல்ல முடியாது; நீங்கள் வசூலிக்க வேண்டியதை விட அதிகமாக வசூலித்து அதை உங்களுக்கே வைத்துக்கொண்டால் மட்டுமே அது அதிக வருமானம் தரும். அதன் பொருள், சகேயு ஒரு ஊழல் நிறைந்த வரி வசூலிப்பவனாக இருந்தான் என்பதே. அவன் மக்களை ஏமாற்றியதை அவனே ஒப்புக்கொண்டான் (லூக்கா 19:8).
இயேசு தானாகவே முன்வந்து சகேயுவின் வீட்டிற்குச் சென்றதை மக்கள் கண்டபோது, “பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்” என்று முறுமுறுத்தார்கள் (லூக்கா 19:7).
மக்கள் சகேயுவை ஒரு ஐசுவரியவான் என்றும், ஊழல் நிறைந்த பாவி என்றும் வரையறுத்தார்கள்.
ஆனால் இயேசு அப்படிச் செய்யவில்லை, அவர் அவனைக் கண்டபோது, சகேயுவை அவனது பெயர்ச் சொல்லி அழைக்கிறார். அவனுடைய பெயருக்கு 'தூய்மையானவன்' என்று பொருள், இயேசு அவனை சந்தித்தபோது அவன் தூய்மையானவனாக இல்லாவிட்டாலும், அந்தப் பெயரைச் சொல்லியே இயேசு அவனை அழைக்கத் தேர்ந்தெடுத்தார்.
இயேசு நம்முடைய பாவங்களைக் கொண்டோ அல்லது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுப்பதில்லை, மாறாக அவர் நம்மை எப்படி உருவாக்கினாரோ - அதாவது தூய்மையானவர்களாக, குற்றமற்றவர்களாக, பரிசுத்தமானவர்களாக மற்றும் நற்கிரியைகளைச் செய்பவர்களாகவே - நம்மைப் பார்க்கிறார்.
உங்களை நீங்களே எப்படி வரையறுத்தாலும் அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்தாலும், இயேசு உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் யார் என்பதையும், நீங்கள் செய்த அனைத்தையும் அவர் அறிந்திருந்தாலும், அவர் உங்களைப் பெயர் சொல்லி அழைக்கத் தேர்ந்தெடுக்கிறார்:
“பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்/என்னுடையவள்.” – ஏசாயா 43:1