நான் ஒரு மரமாக இருந்திருக்கலாம் என ஏங்குகிறேன்
வேதாகமக் கதைகளை படிக்கும்போது, அக்கதைக்குள் உங்களை நீங்களே வைத்து, "நான் இதில் எந்த கதாபாத்திரத்தோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன்?" என்று கேட்பது ஒரு சிறந்த செயலாகும்.
சகேயுவின் கதையை நான் அப்படி வாசித்தபோது, எனக்கு தோன்றிய அந்த கதாபாத்திரம் : அந்த மரம்! 🤭
அல்லது குறைந்தபட்சம், என்னை நானே அப்படித் தான் பார்க்க விரும்புகிறேன். நான் அதை பின்வருமாறு விரிவாக விளக்குகிறேன்.
வேதாகமம் பலமுறை நம்மை மரங்களுக்கு ஒப்பிடுகிறது:
“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” – சங்கீதம் 1:3
"கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்." – எரேமியா 17:7-8
“அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும்.” – மத்தேயு 7:17
மரங்கள் வலிமையானவை, உறுதியானவை, வேரூன்றியவை மற்றும் காலப்போக்கில் சீராக வளரக்கூடியவை.
நானும் மற்றவர்களுக்கு ஒரு மரத்தைப் போலவே இருக்க விரும்புகிறேன்; கிறிஸ்துவுக்குள் உறுதியாகவும் வேரூன்றியுமுள்ள ஒரு மரமாக, அதன் கிளைகள் நிழலையும் ஆதரவையும் தந்து, அதன் கனிகள் புத்துயிர் அளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
சகேயுவைச் சுற்றியிருந்த கூட்டத்தினர் அவனைப் பாவி என்றும், இயேசுவின் நேரத்திற்கும் கவனத்திற்கும் தகுதியற்றவன் என்றும் தீர்ப்பிட்டு நிந்தித்தார்கள் (லூக்கா 19:7). ஆனால் அந்த மரம் அப்படிச் செய்யவில்லை. சகேயுவின் கதையில் வரும் மரம் அவனைத் தீர்ப்பிடவில்லை அல்லது தனது கிளைகளில் ஏற அவனுக்குத் தடை விதிக்கவில்லை. அது விசேஷமாக எதையும் செய்யவில்லை, ஆனால் அவன் கூட்டத்திற்கு மேலாக உயர்த்தப்பட்டு இயேசுவைக் காண்பதற்குத் தேவையான ஆதரவை அவனுக்கு வழங்கியது.
அதேபோல், கிறிஸ்துவுக்குள் வலுவாக வேரூன்றிய ஒரு நபராக இருப்பதன் மூலம், மற்றவர்கள் இயேசுவைப் பின்தொடர நான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும், அவர்களை உயர்த்திவிடவும் விரும்புகிறேன்.
நீங்கள் எப்படி? இந்தக் கதையில் நீங்கள் யாரோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்?