ஹலோ?? உங்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா?? 📞
“ஹலோ, நான் பேசுவது கேட்கிறதா?”
“ஹலோ?”
“நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கவில்லை!”
“இப்போது கேட்கிறதா?”
“உங்கள் குரல் விட்டு விட்டு கேட்கிறது!”
இது உங்களுக்குப் பழகிய ஒன்றாக தோன்றுகிறதா? மோசமான சிக்னல் உள்ள ஒரு தொலைபேசி அழைப்பு எவ்வளவு போராட்டமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.😫
ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், சில நேரங்களில் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதும் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தேவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்றும், என் வாழ்க்கையில் அவருடைய வழிநடத்துதல் வேண்டும் என்றும் நான் எவ்வளவுதான் ஜெபித்தாலும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தேவன் என்ன சொல்கிறார் என்பதைப் பகுத்தறிவது பல நேரங்களில் கடினமாக இருக்கிறது.
தேவனுடனான தொடர்பு, ஒரு தெளிவான தொலைபேசி அழைப்பைப் போல எந்தத் தடையுமின்றி இருந்தால், அவரோடு நெருக்கமான உறவில் வாழ்வது எவ்வளவு எளிதாக இருக்கும்!
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், தேவன் நம்மிடம் பேச ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளை வைத்திருக்கிறார். தேவன் நம்மிடம் பேசும் ஏழு வழிகளைப் பற்றி இந்த வாரம் நாம் ஆராயப்போகிறோம். அதில் முதல் வழி – இது எப்போதும் சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும் – அது அவருடைய வார்த்தையாகிய வேதாகமம்.
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” – 2 தீமோத்தேயு 3:16-17
ஜெபம், சொப்பனங்கள், தரிசனங்கள் அல்லது வேறு எந்த வழியிலும் தேவனுடைய சத்தத்தை நம்மால் கேட்க முடியாவிட்டாலும், நாம் தேவனிடமிருந்து கேட்க வேண்டிய அனைத்தும் அவருடைய வார்த்தையில் உள்ளன.
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” – எபிரெயர் 4:12
எனக்குப் பிடித்த ஒரு பொன்மொழி இது:
தேவன் பேசுவதைக் கேட்க வேண்டுமா? உங்கள் வேதாகமத்தை வாசியுங்கள். தேவன் சத்தமாகப் பேசுவதைக் கேட்க வேண்டுமா? உங்கள் வேதாகமத்தைச் சத்தமாக வாசியுங்கள்! — ஜஸ்டின் பீட்டர்ஸ்
வேதாகமத்தை ஒரு கடமையாகக் கருதாமல், தேவன் உங்களிடம் பேசும் ஒரு வழியாகக் கருதி வாசிக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். எங்கிருந்து தொடங்குவது என்று தயங்குகிறீர்களா? எங்களுடைய YouVersion Bible Appல் உங்களுக்காகப் பல உபயோகமான வாசிப்புத் திட்டங்கள் தயாராக உள்ளன.